தெப்பத்திருவிழா


தெப்பத்திருவிழா
x

தெப்பத்தில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

காஞ்சிபுரம்

108 வைணவ திவ்யதேசங்களில் ஒன்று காஞ்சீபுரம் வரதராஜ பெருமாள்கோவில். இந்த கோவிலில் இருந்து வரதராஜ பெருமாள் ஆண்டுதோறும் மாசி மாதம் வாலாஜாபாத் அருகே உள்ள தென்னேரி கிராமத்தில் தாத சமுத்திரம் என்று அழைக்கப்படும் தென்னேரி ஏரியில் எழுந்தருளுவது வழக்கம்.

தென்னேரி தெப்பத்திருவிழாவையொட்டி காஞ்சீபுரத்தில் இருந்து புறப்பட்ட வரதராஜ பெருமாள் நசரத் பேட்டை, முத்தியால்பேட்டை, அய்யம்பேட்டை, கருக்கு பேட்டை, ஏகனாம் பேட்டை, திம்மராஜாம்பேட்டை, வெண்குடி, வாலாஜாபாத் வழியாக கட்டவாக்கம், மஞ்சமேடு, விளாகம், குண்ணவாக்கம், கோவளவேடு, திருவங்கரணை, அயிமிஞ்சேரி, அகரம் உள்ளிட்ட கிராம பகுதிகளில் வலம் வந்து மண்டகப் படி கண்டருளி தென்னேரி கிராமத்தை சென்றடைந்தார்.

தென்னேரி கிராமத்தில் வலம் வந்த பிறகு வரதராஜ பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சன அபிஷேக ஆராதனைகள் செய்யப்பட்டு மலர் மாலைகள், திருவாபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். பின்னர் வேதபாராயண கோஷ்டியினர் பாடிவர, மேளதாளங்கள் முழங்க, தாத சமுத்திரம் என்று அழைக்கப்படும் தென்னேரி ஏரியில் வாழைமரம், மாவிலை தோரணம், மலர் மாலைகள், மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் வரதராஜ பெருமாள் ஸ்ரீதேவி பூதேவியுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.


Next Story