தேனி பழைய பஸ் நிலையம் மூடல்

தேனி ராஜவாய்க்காலில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்காக பழைய பஸ் நிலையம் மூடப்பட்டது. பயணிகள் சாலையில் காத்திருந்து பஸ்களில் பயணம் செய்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றம்
தேனி கொட்டக்குடி ஆற்றின் தடுப்பணையில் இருந்து தாமரைக்குளம் கண்மாய் வரை சுமார் 2 கி.மீ. நீளத்துக்கு ராஜவாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் கடந்த 13-ந்தேதி அதிரடியாக தொடங்கியது. தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
இந்த வாய்க்காலில் மொத்தம் 166 ஆக்கிரமிப்புகள் கண்டறியப்பட்டன. நேற்று முன்தினம் மாலை வரை 155 ஆக்கிரமிப்பு கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. வாய்க்கால் பகுதியில் ஆக்கிரமித்து இருந்த தேனி நகரின் ஒரு பகுதியே காலியாகி உள்ளது.
இந்த வாய்க்கால் மீது தான் பழைய பஸ் நிலையத்தின் ஒரு பகுதி அமைந்துள்ளது. நகராட்சி நிர்வாகம் சார்பில் இந்த வாய்க்காலை ஆக்கிரமித்து வணிக கட்டிடங்கள் கட்டப்பட்டு இருந்தன. அதே பகுதியில் தான் பூ மார்க்கெட்டும் செயல்பட்டது. பூ மார்க்கெட் உள்பட நகராட்சியின் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றும் பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டன.
பஸ் நிலையம் மூடல்
இந்த பணியின் காரணமாக தேனி பழைய பஸ் நிலையத்தின் நுழைவு வாயில், பஸ்கள் வெளியேறும் பகுதிகள் அனைத்தும் மூடப்பட்டன. பஸ்கள் அனைத்தும் மதுரை சாலை, கம்பம் சாலை வழியாக இயக்கப்பட்டன. பஸ் நிலையத்துக்கு வெளியே பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி, இறக்கிச் சென்றன. காலை நேரத்தில் ஏராளமான மக்கள் சாலையில் காத்திருந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்.
பூ மார்க்கெட்டை அகற்றுவதற்கு வியாபாரிகள் சிலர் ஆட்சேபனை தெரிவித்தனர். அவர்களுக்கு வாரச்சந்தை வளாகத்தில் பூமார்க்கெட் அமைக்க இடம் வழங்கப்படும் என்று ஆர்.டி.ஓ. முத்துமாதவன் தலைமையில் அதிகாரிகள் உறுதி அளித்தனர். அதன்பிறகு பூ மார்க்கெட் அமைக்கப்பட்டிருந்த கம்பிகள், மேற்கூரைகள் கிரேன் மூலம் அகற்றப்பட்டன. பின்னர் வணிக கட்டிடங்கள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. பொதுப்பணித்துறை உதவி பொறியாளர்கள் பாஷித், ஷியாம்சுந்தர் தலைமையிலான அலுவலர்கள் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து அகற்றுதல், கட்டுமான கழிவுகளை அங்கிருந்து வெளியேற்றுதல் போன்ற பணிகளில் ஈடுபட்டனர்.






