பேக்கரி கடையில் ரூ.1½ லட்சம் திருட்டு
விழுப்புரத்தில் பேக்கரி கடையில் ரூ.1½ லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம், ஜூலை.1-
விழுப்புரத்தில் பேக்கரி கடையில் ரூ.1½ லட்சத்தை திருடிச்சென்ற மர்ம நபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பேக்கரி கடை
விழுப்புரம் சர்ச் தெருவில் வசித்து வருபவர் அண்ணாமலை (வயது 45). இவர் விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் மஞ்சு நகர் பகுதியில் நண்பர்கள் சிலரை பங்குதாரராக சேர்த்துக்கொண்டு பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் வியாபாரம் முடிந்ததும் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று காலை 6.30 மணியளவில் அந்த கடையின் பூட்டுகள் உடைக்கப்பட்டு ஷட்டர் கதவு திறந்து கிடந்தது. இது குறித்த தகவலின் பேரில் அண்ணாமலை மற்றும் அவரது நண்பர்கள், கடைக்கு விரைந்து சென்று பார்த்தபோது கல்லாப்பெட்டி உடைக்கப்பட்டு அதில் வைத்திருந்த ரூ.1½ லட்சம் ரொக்கம் திருட்டுப்போயிருந்ததை அறிந்து அதிர்ச்சியடைந்தனர்.
கைரேகை நிபுணர்கள்
இதுகுறித்த தகவலின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார், அந்த கடைக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு திருட்டு நடந்த கடையில் பதிந்திருந்த தடயங்களை சேகரித்தனர். தொடர்ந்து, அக்கடையில் இருந்த சி.சி.டி.வி. கேமரா பதிவுகளை கைப்பற்றி போலீசார் ஆய்வு செய்ததில், நள்ளிரவில், தொப்பியுடன் கூடிய டி-சர்ட்டை அணிந்தபடி வந்த மர்ம நபர் ஒருவர், அந்த தொப்பியால் முகத்தை மூடியபடி அக்கடைக்குள் புகுந்து கல்லாப்பெட்டியில் இருந்த பணத்தை திருடிச்சென்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. ஆனால் அந்த நபர், முகத்தை மூடியபடி வந்ததால் அவர் யார்? என்பதை அடையாளம் காண்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மர்ம நபருக்கு வலைவீச்சு
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபரை வலைவீசி தேடி வருகின்றனர்.