காரிமங்கலம் அருகே2 கோவில்களில் 9 பவுன் நகைகள் திருட்டு அரசு பள்ளியிலும் கைவரிசை காட்டிய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
காரிமங்கலம்:
காரிமங்கலம் அருகே 2 கோவில்களில் 9 பவுன் நகைகளை திருடிய மர்ம நபர்கள் அரசு பள்ளியிலும் கைவரிசை காட்டினர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவில்களில் நகை திருட்டு
தர்மபுரி மாவட்டம் காரிமங்கலம் அருகே பூலாம்பட்டி கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் நேற்று முன்தினம் புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பூசாரி பூஜை முடிந்து கோவில் கதவை பூட்டிவிட்டு சென்றுவிட்டார் நேற்று காலை பூசாரி கோவிலுக்கு வந்தார். அப்போது கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார்.இதையடுத்து அவர் உள்ளே சென்று பார்த்தபோது உண்டியல் உடைக்கப்பட்டு அதில் இருந்த 2 பவுன் நகை திருட்டு போனது தெரியவந்தது. இதேபோன்று அதே பகுதியில் உள்ள பச்சையம்மன் கோவில் கதவு உடைக்கப்பட்டு உள்ளே உண்டியலில் இருந்த 7 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் கிராமமக்கள் கோவில் முன்பு திரண்டனர்.
போலீசார் விசாரணை
இந்த திருட்டு சம்பவம் குறித்து கோவில் நிர்வாகிகள் காரிமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதேபோல் பெரியாம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த கம்ப்யூட்டர் மற்றும் டேட்டா பொருட்கள் திருட்டு போனது. இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் திருமால் காரிமங்கலம் போலீசில் புகார் செய்தார்.
இந்த திருட்டு சம்பவங்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை போலீசார் ஆய்வு செய்தனர். இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.