தேசியக்கொடியுடன் வீரசோழன் ஆற்றில் இறங்கி இளைஞர்கள் போராட்டம்
கழிவுநீர் திறந்துவிடப்படுவதை தடுக்கக்கோரி தேசியக்கொடியுடன் வீரசோழன் ஆற்றில் இறங்கி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொறையாறு:
கழிவுநீர் திறந்துவிடப்படுவதை தடுக்கக்கோரி தேசியக்கொடியுடன் வீரசோழன் ஆற்றில் இறங்கி இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வீரசோழன் ஆறு
காவிரியாற்றின் கிளை ஆறுகளில் ஒன்றான வீரசோழன் ஆறு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடலில் கலக்கிறது. பல்லாயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு பாசன வசதி மற்றும் வடிகால் வசதி அளிக்கும் முக்கிய ஆறான வீரசோழன் ஆறு உள்ளது. இந்த ஆற்றில் சாக்கடை கழிவுநீர் விடப்படுகிறது. இதனால் ஆறு மாசடைந்து நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு வருவதாகவும், ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க கோரியும், இலுப்பூர் ஊராட்சியில் உள்ள குளம் மற்றும் வாய்க்கால்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி தூர்வார நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பலமுறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தேசிய கொடியுடன் போராட்டம்
இதனை கண்டித்து இலுப்பூர் கிராமத்தை சேர்ந்த கதிரவன் என்பவர் ஆற்றில் தலைகீழாக சிரசாசனம் செய்தும், செல்போன் கோபுரத்தின் மீது ஏறி நின்றும் இரண்டு முறை போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட கலெக்டர் லலிதா மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்தும், ஆற்றில் கழிவுநீர் திறந்துவிடப்படுவதை தடுக்கக்கோரியும் கதிரவன் மற்றும் இளைஞர்கள் 10-க்கும் மேற்பட்டோர் பேனர் வைத்து தேசிய கொடியுடன் வீரசோழன் ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேச்சுவார்த்தை
தகவல் அறிந்து வந்த தரங்கம்பாடி தாசில்தார் புனிதா, மண்டல துணை தாசில்தார் சதீஷ்குமார், பொறையாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு மற்றும் வருவாய்த்துறையினர், இலுப்பூர் ஊராட்சி மன்ற தலைவர் ரவி ஆகியோர் கிராமமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் வருகிற டிசம்பர் மாதம் 20-ந்தேதிக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர்கள் உறுதி அளித்தனர். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.