ஆட்டை காப்பாற்ற கிணற்றில் குதித்த தொழிலாளி சாவு
ஆட்டை காப்பாற்ற கிணற்றில் குதித்த தொழிலாளி நீரில் மூழ்கி இறந்தார்.
ஆம்பூர் அடுத்த செங்கிலி குப்பம் பகுதியை சேர்ந்தவர் வேலு (வயது 55). ஆடு மேய்க்கும் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் சுமார் 30 ஆடுகளை விவசாய நிலத்தில் மேய்த்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு ஆடு திடீரென அந்த பகுதியில் உள்ள கிணற்றில் தவறி விழுந்தது. அதனை காப்பாற்றுவதற்காக வேலு கிணற்றில் குதித்தார்.
அப்போது கிணற்றில் மூழ்கி சேற்றில் சிக்கிகொண்டார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அவரைக் காப்பாற்ற முயன்றனர். முடியாததால் ஆம்பூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி அவரை தேடினர்.
இரவு நேரமானதால் தேடும் பணி கைவிடப்பட்டது. பின்னர் நேற்று அதிகாலை தீயணைப்புத் துறையினர் மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது வேலு பிணமாக மீட்கப்பட்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆம்பூர் தாலுகா போலீசார் வேலு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற சென்றபோது தண்ணீரில் மூழ்கி தொழிலாளி இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.