"தமிழகத்தில் உளவுத்துறையின் பணி திருப்தியாக இல்லை" - ஜி.கே.வாசன் கருத்து

உளவுத்துறையை பலப்படுத்த வேண்டியது அரசின் கடமையாக இருக்கிறது என ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.
தஞ்சாவூர்,
கோவை கோட்டைஈஸ்வரன் கோவில் அருகே கடந்த 23-ந் தேதி அதிகாலை 4.10 மணியளவில் கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்றது. இதில் ஜமேஷா முபின் (வயது28) என்பவர் பலியானார். இது தொடர்பாக இது வரை 6 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். இந்த வழக்கு என்.ஐ.ஏ.விடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், பட்டுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"கோவை கார் வெடிப்பு சம்பவத்தில் என்.ஐ.ஏ. விசாரணையின் முடிவில் அனைத்து உண்மை நிலைகளும் தெரிய வரும். பல கோணங்களில், பல சந்தேகங்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் உளவுத்துறையின் பணி போதுமானது அல்ல. மக்களுக்கு அதில் திருப்தியில்லை. அதனை பலப்படுத்த வேண்டியது அரசின் கடமையாக இருக்கிறது."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.






