கொடைக்கானல் ஏரியை தூர்வாரும் பணிகள் நடக்கின்றன


கொடைக்கானல் ஏரியை தூர்வாரும் பணிகள் நடக்கின்றன
x

கொடைக்கானல் ஏரியை தூர்வாரும் பணிகள் நடக்கின்றன என்று மதுரை ஐகோர்ட்டில் தகவல் தெரிவிக்கப்பட்டது.

மதுரை

ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணையைச் சேர்ந்த வக்கீல் தீரன்திருமுருகன், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், மலைகளின் இளவரசி என கொடைக்கானல் அழைக்கப்படுகிறது. இங்கு ஆண்டு முழுவதும் சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். மதுரை கலெக்டராக இருந்த ஹென்றி லிவிங்ஸ் என்பவர் கடந்த 1863-ம் ஆண்டில் சுமார் 60 ஏக்கரில் கொடைக்கானல் ஏரியை உருவாக்கினார். ஆனால், நீண்ட காலமாக ஏரி சுத்தம் செய்யப்படவில்லை. ஆகாயத் தாமரைகளும், பாசிகளும் அதிகளவில் நிறைந்து மாசடைந்துள்ளது. கொடைக்கானலில் அதிகளவு மழை பெய்தால் மரங்கள் முறிந்து ஏரிக்குள் விழுகின்றன. கடந்த 2014-ம் ஆண்டில் ஏரியை சுத்தம் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஆனால் ஏரியை சுத்தம் செய்யும் பணி நடந்ததாக தெரியவில்லை. எனவே, கொடைக்கானல் ஏரியை சுத்தம் செய்ய உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் மகாதேவன், சத்தியநாராயணபிரசாத் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, ஏரியை தூர்வாரி, புனரமைப்பு செய்வதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது பணிகள் நடந்து வருகிறது என்றார்.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

==========


Related Tags :
Next Story