மின் கம்பிகள் மீது உரசியதால் லாரியில் தீப்பிடித்து வைக்கோல்கள் எரிந்து நாசம்


மின் கம்பிகள் மீது உரசியதால் லாரியில் தீப்பிடித்து வைக்கோல்கள் எரிந்து நாசம்
x

மின் கம்பிகள் மீது உரசியதால் லாரியில் தீப்பிடித்தது. இதில், வைக்கோல்கள் எரிந்து நாசமானது.

கரூர்

மின் கம்பிகள் மீது உரசியது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே தட்டாங்கோயில் பகுதியை சேர்ந்த பக்கிரிசாமி என்பவருக்கு சொந்தமான லாரியில் மன்னார்குடியில் இருந்து விற்பனைக்காக வைக்கோல் கட்டுகளை ஏற்றிக்கொண்டு கரூர் மாவட்டம் தவுட்டுப்பாளையத்திலிருந்து நன்செய் புகழூர் பகுதியில் வைக்கோல் இறக்கிவிட்டு, தவுட்டுப்பாளையம் பகுதியை நோக்கி லாரி சென்று கொண்டிருந்தது.

மன்னார்குடி அருகே திருவண்டுதுறை பகுதியை சேர்ந்த தனபால் (வயது 40) என்பவர் லாரியை ஓட்டி சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரியின் மேல் அடுக்கி வைத்திருந்த வைக்கோல் கட்டுகள் அந்த வழியாக சென்ற மின் கம்பிகள் மீது உரசியது. இதில் இரண்டு மின் கம்பிகளும் ஒன்றோடு ஒன்று உரசிதால் வைக்கோல் கட்டுகளில் திடீரென தீப்பற்றி எரிய ஆரம்பித்தது.

கடும் புகைமூட்டம்

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த டிரைவர் லாரியை சாலையோரம் நிறுத்தினார். உடனடியாக அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து லாரியில் உள்ள வைக்கோலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. இது குறித்து வேலாயுதம்பாளையம், கரூர், புகழூர் காகித ஆலை தீயணைப்பு நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் 3 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வைக்கோல் கட்டுகளில் பற்றி எரிந்து கொண்டிருந்த தீயை கட்டுப்படுத்தி அருகாமையில் உள்ள பகுதிகளுக்கு தீ பரவாமலும், லாரியின் வெளிப்புறம் தீ எரியாமலும் முற்றிலுமாக அணைத்தனர். இருப்பினும் வைக்கோல்கள் எரிந்து நாசமடைந்தது.

மேலும், அப்பகுதியில் கடும் புகைமூட்டம் ஏற்பட்டதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் அதிஷ்டவசமாக டிரைவர் உள்ளிட்ட யாருக்கும் எந்த காயமும் இல்லை. இந்த சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story