இடிந்து விழும் நிலையில் யோக நரசிங்க பெருமாள் கோவில்
500 ஆண்டுகள் பழமையான யோக நரசிங்க பெருமாள் கோவில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சிங்கம்புணரி,
500 ஆண்டுகள் பழமையான யோக நரசிங்க பெருமாள் கோவில் இடிந்து விழும் நிலையில் உள்ளது. அதனை சீரமைக்க பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
500 ஆண்டுகள் பழமையான கோவில்
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி பகுதியில் பழமையான கோவில்கள் அதிக அளவில் உள்ளன. குன்றக்குடி தேவஸ்தானம், சிவகங்கை தேவஸ்தானம், அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில்கள் மற்றும் கிராமத்து கோவில்கள் என அனைத்து ஊர்களிலும் பிரசித்தி பெற்ற கோவில்கள் உள்ளன. இதில் மட்டியூர் என்று அழைக்கப்படும் எஸ்.வி.மங்கலத்தில் 500 ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் இருந்து கண்டெடுக்கப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட பழமை வாய்ந்த யோகநரசிங்கபெருமாள் கோவில் உள்ளது.
500 ஆண்டுகளுக்கு முன்பு பாலாற்றின் வடபகுதியில் மட்டியூர், தென்பகுதியில் அருவியூர் என இரு பகுதிகளில் கிராமமாக இருந்ததாக கூறப்படுகிறது. அப்போதைய மன்னர்களால் போர் தொடுக்கப்பட்டு அழிக்கப்பட்ட கிராமங்களாக இந்த மட்டியூர், அருவியூர் இருந்தது. பெரிய கோவில்கள் அழிக்கப்பட்டு கொள்ளையடிக்கப்பட்டதாக செவிவழி செய்திகள் கூறுகின்றன.
சீரமைக்க வேண்டும்
தற்போது திண்டுக்கல்-திருப்பத்தூர் சாலையில் எஸ்.வி.மங்கலம் என்றழைக்கப்படும் மட்டியூர் பகுதியில் உள்ள யோகநரசிங்க பெருமாள் கோவில் தற்போதும் உள்ளது. சிங்கம்புணரி வட்டார பகுதியில் பெருமாள் கோவில் என்று எஸ்.வி.மங்கலத்தில் மட்டுமே உள்ளது. இங்கு சுற்று வட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் செய்கின்றனர். மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவில் தற்போது பராமரிப்பு இல்லாமல் சிதிலமடைந்து காணப்படுகிறது.
கோவில் முன்பு உள்ள மண்டப சுவர் தூண் ஆகியவை விழும் நிலையில் உள்ளது. மழைக்காலத்தில் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் என்ற ஆபத்தான நிலையில் உள்ளது பக்தர்களை வேதனையடைய செய்துள்ளது. பழமை வாய்ந்த இக்கோவிலை சீரமைக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.