வாலிபரை கொன்று சோளக்காட்டில் உடல் எரிப்பு


வாலிபரை கொன்று சோளக்காட்டில் உடல் எரிப்பு
x

வாலிபரை கொன்று சோளக்காட்டில் உடல் எரிக்கப்பட்டது.

பெரம்பலூர்

எரிந்த நிலையில் வாலிபர் பிணம்

பெரம்பலூர் சிதம்பரம் நகரை சேர்ந்தவர் ராசப்பன்(வயது 93). இவருக்கு சொந்தமான வயல், பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடை அருகே உள்ளது. அந்த வயலில் ராசப்பனின் இளைய மருமகனான அதே பகுதியை சேர்ந்த ராஜா சிதம்பரம் (62) என்பவர், மாடுகளுக்கு தீவனமாக சோளம் பயிரிட்டிருந்தார்.

நேற்று காலை 8.30 மணியளவில் அவர் வழக்கம்போல் சோளம் அறுக்க வயலுக்கு வந்தார். அப்போது சோளக்காட்டில் சுமார் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உடல் எரிந்த நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

காலி மண்எண்ணெய் பாட்டில்

உடனடியாக அவர் இது குறித்து பெரம்பலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில் பெரம்பலூர் சரக துணை சூப்பிரண்டு பழனிசாமி, பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து அந்த வாலிபரின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இறந்து கிடந்தவரின் உடலில் 2 கால் பாதங்களும், வலது கையும் மட்டும் எரியவில்லை. மற்ற உடல் பாகங்கள் அனைத்தும் எரிந்து கருகிய நிலையில் காணப்பட்டது. மேலும் உடல் அருகே மண்எண்ணெய் வைத்திருந்ததற்கான காலி பாட்டில், காலணி, பீடித்துண்டு ஆகியவை கிடந்தன. அவற்றை போலீசார் கைப்பற்றினர்.

உடல் எரிப்பு

மேலும் அங்கு போலீஸ் மோப்ப நாய் பைரவா வரவழைக்கப்பட்டு, துப்பு துலக்கப்பட்டது. இறந்து கிடந்தவரின் உடலை மோப்பம் பிடித்தவாறு சென்ற நாய் வயலில் சிறிது தூரம் ஓடிச்சென்று நின்றுவிட்டது. அது யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதற்கிடையே அங்கு கைரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்தனர். பின்னர் திருச்சியில் இருந்து தடயவியல் துறை நிபுணர் குமரவேல் வந்து உடலை ஆய்வு செய்தார்.

இதைத்தொடர்ந்து இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த வாலிபரை மர்ம நபர்கள் கொலை செய்து, உடலை இங்கு கொண்டு எரித்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். மேலும் இது தொடர்பாக பெரம்பலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்?, அவரை மர்ம நபர்கள் கொலை செய்ததற்கான காரணம் என்ன? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவம் பெரம்பலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story