முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டர் சிறைபிடிப்பு
புதுக்கோட்டை அருகே கார் திருட்டு தொடர்பாக விசாரிக்க சென்றபோது பெயர் குழப்பத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிற்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை பொதுமக்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
4 கார்கள் திருட்டு
சென்னையை அடுத்த செங்கல்பட்டை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. டிராவல்ஸ் நடத்தி வரும் இவரது 4 கார்களை மர்ம ஆசாமி ஒருவர் அடுத்தடுத்து திருடி சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணமூர்த்தி அளித்த புகாரின் பேரில் மறைமலை நகர் போலீசார் விசாரணை நடத்தினர். இது தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா காரையூர் கிராமத்தை சேர்ந்த பொன்னமராவதி தி.மு.க. வடக்கு ஒன்றிய இளைஞர் அணி அமைப்பாளர் பாரதி என்கிற பாரதிதாசன் (வயது 38) என்பவரிடம் விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்தனர். இதுதொடர்பாக அவரிடம் போலீசார் செல்போன் மூலம் பேசுகையில், பாரதி, தான் காரையூரில் இருப்பதாக கூறி தனது முகவரியை கூறியுள்ளார்.
இதையடுத்து, அவரிடம் விசாரணை நடத்துவதற்காக மறைமலை நகர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவா, கிருஷ்ணமூர்த்தியின் உதவியாளர், கார் டிரைவர் உள்பட 4 பேரை அழைத்துக்கொண்டு ஒரு காரில் காரையூருக்கு சென்றுள்ளார்.
சிறைபிடிப்பு
காரையூரில் போலீசாரால் விசாரிக்க வேண்டிய பாரதி என்கிற பாரதிதாசனின் வீடும், அதே ஊரில் வசிக்கும் காரையூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாரதியின் வீடும் 1½ கிலோ மீட்டர் தொலைவில் உள்ளன. இந்த நிலையில் பாரதி என்கிற பாரதிதாசன் வீட்டுக்கு செல்வதற்கு பதிலாக பெயர் குழப்பத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் அவருடன் வந்தவர்கள் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாரதியின் வீட்டுக்கு நேற்று அதிகாலை 4 மணியளவில் சென்றனர்.
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி சென்னைக்கு சென்ற நிலையில் அவரது மாமியார் அழகம்மாள் (67) மட்டும் வீட்டில் இருந்துள்ளார். அதிகாலையில் போலீசார் வந்ததால் அதிர்ச்சி அடைந்த அழகம்மாள் அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்துள்ளார்.
இதையடுத்து, பாரதியின் உறவினர்கள் மறைமலை நகர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவாவிடம் விசாரித்ததில் அவர் பெயர் குழப்பத்தில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாரதியின் வீட்டிற்கு ெசன்றது தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த பாரதியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் அவருடன் வந்த கார் டிரைவர் உள்ளிட்டோரை சிறைபிடித்தனர்.
சாலை மறியல்
முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வீட்டிற்கு போலீசார் வந்ததை கண்டித்து அப்பகுதி மக்கள் காரையூர்-புதுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. மேலும், இந்த சம்பவம் தொடர்பாக காரையூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் காரையூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போராட்டம் நடத்தியவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், சமாதானம் அடைந்த அவர்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதையடுத்து, மறைமலை நகர் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சிவா மற்றும் அவருடன் வந்தவர்களை காரையூர் போலீசார் மீட்டு போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் திருட்டு தொடர்பாக விசாரிக்க சென்றபோது பெயர் குழப்பத்தால் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரின் வீட்டிற்கு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.