கழுத்து இறுகி மாணவி பலி
செம்பட்டி அருகே சேலையில் தூரி கட்டி ஆடியபோது கழுத்து இறுகி மாணவி ஒருவர் பலியானார்.
செம்பட்டி அருகே உள்ள ராமநாதபுரத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 32). டிரைவர். அவருடைய மனைவி சரஸ்வதி. இந்த தம்பதியின் மகள் ஜீவபிரீத்தி (10). இவள், அப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று சதீஷ்குமார் வேலைக்கு சென்று விட்டார். தனக்கு உடல்நிலை சரியில்லாததால், தனது தாயார் முருகாயியுடன் சரஸ்வதி மருத்துவமனைக்கு சென்று விட்டார். இதனால் ஜீவபிரீத்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்தாள்.
இந்தநிலையில் வீட்டின் கதவை உள்பக்கமாக பூட்டி விட்டு, சேைலயில் தூரி கட்டி ஜீவபிரீத்தி ஆடி கொண்டிருந்தாள். அப்போது, எதிர்பாராத விதமாக ஜீவபிரீத்தியின் கழுத்தில் சேலை இறுக்கியது. இதில் மூச்சுத்திணறி அவள் பரிதாபமாக இறந்தாள்.
இதற்கிடையே மருத்துவமனைக்கு சென்று விட்டு சரஸ்வதி, முருகாயி ஆகியோர் மதியம் வீடு திரும்பினர். உட்புறமாக வீடு பூட்டப்பட்டிருந்ததால் கதவை தட்டினர். ஆனால் நீண்டநேரம் ஆகியும் கதவு திறக்கப்படவில்லை. இதனையடுத்து ஜன்னல் வழியாக உள்ளே எட்டி பார்த்தபோது சேலை கழுத்தில் இறுகி ஜீவபிரீத்தி உயிரிழந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.