மின்கம்பி உரசியதில் டிராக்டரில் ஏற்றி வந்த வைக்கோல் எரிந்து சாம்பல்


மின்கம்பி உரசியதில் டிராக்டரில் ஏற்றி வந்த வைக்கோல் எரிந்து சாம்பல்
x

மின்கம்பி உரசியதில் டிராக்டரில் ஏற்றி வந்த வைக்கோல் எரிந்து சாம்பலானது.

அரியலூர்

தா.பழூர்:

அரியலூர் மாவட்டம், தா.பழூர் அருகே உள்ள தென்கச்சிபெருமாள்நத்தம் கிராமத்தில் பரவலாக சம்பா நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு, தற்போது அறுவடை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மேலக்குடிகாடு கிராமத்தில் இருந்து விவசாய நிலங்கள் வழியாக வைக்கோல்களை ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் நேற்று வந்தது. தென்கச்சிபெருமாள்நத்தம் கிராமம் அருகே வந்தபோது சாலையின் குறுக்கே சென்ற மின் கம்பியில் உரசி தீப்பிடித்தது. இதில் வைக்கோலில் மளமளவென தீ பரவி கொழுந்து விட்டு எரிந்தது. இதை அறிந்த டிராக்டர் டிரைவர் உடனடியாக கீழே இறங்கி சமயோகிதமாக செயல்பட்டு, டிராக்டரையும் டிப்பரையும் தனித்தனியாக பிரித்தார். இரவு நேரத்தில் தீப்பிடித்ததால் அதை கவனித்த அப்பகுதி விவசாயிகள் உடனடியாக டிரைவருக்கு உதவி செய்வதற்கு வந்தனர். மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடனடியாக மின்சாரம் நிறுத்தப்பட்டது. ஜெயங்கொண்டம் தீயணைப்பு நிலையத்திற்கும் விவசாயிகள் தகவல் தெரிவித்தனர். மேலும் அங்கிருந்த விவசாயிகள் ஒன்று கூடி அருகில் உள்ள பாசன வாய்க்காலில் இருந்து தண்ணீரை கொண்டு வந்து ஊற்றி தீயை அணைக்க போராடினர். எரிந்து கொண்டிருந்்த வைக்கோல் பகுதிகளை டிராக்டரில் இருந்து கீழே தள்ளிவிட்டு தண்ணீர் ஊற்றி அணைத்தனர். வண்டியில் இருந்த வைக்கோல் பொதியின் அளவு குறைந்தவுடன் டிப்பரை தலைகீழாக கவிழ்த்து அனைத்து வைக்கோலையும் சாலையில் கொட்டினர். பின்னர் டிப்பரை தீப்பிடித்த பகுதியில் இருந்து அப்புறப்படுத்தினர். இதற்கிடையில் ஜெயங்கொண்டத்தில் இருந்து தீயணைப்பு மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் சாலையில் கொட்டப்பட்ட வைக்கோலில் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை முற்றிலும் அணைத்தனர். இந்த தீ விபத்தில் வைக்கோல் முற்றிலும் எரிந்து சாம்பலானது. மேலும் டிராக்டரின் உதிரிபாகங்களும் எரிந்து சேதமடைந்தன.


Next Story