கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்தது
சென்னை கீழ்ப்பாக்கம் போலீஸ் குடியிருப்பில் வீட்டின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்தது. இதில் போலீஸ்காரரின் தாயார் காயம் அடைந்தார்.
சென்னை,
சென்னை நுங்கம்பாக்கம் போக்குவரத்து போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் பேச்சிமுத்து. இவர், சென்னை கீழ்ப்பாக்கம் லூத்ரல் கார்டன் போலீஸ் குடியிருப்பில் தனது மனைவி சுப்புலட்சுமி, 2 பிள்ளைகள் மற்றும் தாயார் சிதம்பரம் (62) ஆகியோருடன் வசித்து வருகிறார்.
பேச்சிமுத்து நேற்று காலை வழக்கம் போல் பணிக்கு சென்றுவிட்டார். பிள்ளைகள் 2 பேரும் பள்ளிக்கூடத்துக்கு சென்றனர். வீட்டில் பேச்சிமுத்துவின் மனைவி சுப்புலட்சுமி, தாயார் சிதம்பரம் ஆகியோர் இருந்தனர். நேற்று மதியம் சுப்புலட்சுமி சமையல் செய்துக் கொண்டிருந்தார். சிதம்பரம் உறங்கி கொண்டிருந்தார்.இந்த நிலையில் வீட்டின் மேற்கூரை பூச்சு திடீரென்று பெயந்து கீழே விழுந்தது. இதில் சிதம்பரம் காயம் அடைந்தார். உடனடியாக அவர் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
போலீஸ் குடியிருப்பின் மேற்கூரை பூச்சு இடிந்து விழுந்து ஏற்பட்ட விபத்தால் அங்கு வசிக்கும் சக போலீஸ் குடும்பத்தினர் பீதியும், அதிர்ச்சியும் அடைந்தனர்.
இந்த நிலையில் மேற்கூரை சுவர் இடிந்த வீட்டை போலீஸ் உயரதிகாரிகள் வந்து பார்வையிட்டு சென்றனர். இதற்கிடையே சுப்புலட்சுமி நிருபர்களிடம் கூறுகையில், இந்த காவலர் குடியிருப்பு கட்டப்பட்டு 40 ஆண்டுகள் ஆகிறது. நாங்கள் கடந்த 8 ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம். மழைக் காலங்களில் குடியிருப்புக்குள் பாம்புகள் வந்துவிடும். வீடு விரிசலுடன் இருப்பதால் மாற்றி தரும்படி பல முறை விண்ணப்பித்தும் இதுவரையில் நடவடிக்கை எடுக்கப்படவில்லை' என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.
இந்த சம்பவம் தொடர்பாக கீழ்ப்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.