தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் - டி.டி.வி. தினகரன்
நியாய விலைக்கடைகள் மூலம் தரமான அரிசி விநியோகிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
சென்னை,
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தனது எக்ஸ் வலைதளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,
தமிழக மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் அரிசி விலை உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் – நியாய விலைக்கடைகள் மூலம் தரமான அரிசி விநியோகிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.
காவிரி டெல்டா மாவட்டங்களில் போதிய தண்ணீரின்றி நிலவிய வறட்சியின் காரணமாக நெல் மகசூல் பெருமளவு குறைந்ததால் அனைத்து வகையான அரிசியின் விலை கிலோ ஒன்றுக்கு ரூ.12 முதல் 15 வரை அதிகரித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழக அரசின் நியாய விலைக்கடைகளின் மூலம் விநியோகிக்கப்படும் அரிசியின் தரம் குறித்து புகார் எழுந்துள்ள நிலையில், வெளிச்சந்தைகளில் விற்கப்படும் அரிசியின் திடீர் விலை உயர்வு ஏழை, எளிய, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு பெருமளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ஏற்கனவே, அத்தியாவசியப் பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்திருக்கும் நிலையில் தற்போது அரிசியின் விலையும் தொடர்ந்து உயர்ந்து வருவதால் உணவகங்களில் விற்கப்படும் உணவு வகைகளின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே, தமிழக மக்களை பாதிப்புக்குள்ளாக்கும் அரிசி விலை உயர்வை கட்டுக்குள் கொண்டு வர தனிக்கவனம் செலுத்துவதோடு, நியாய விலைக்கடைகளின் மூலம் தரமான அரிசி விநியோகிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டுமெனவும் தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.