வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: தேர்தல் கமிஷன் அஜாக்கிரதை - ஆர்.எஸ்.பாரதி


வாக்காளர் பட்டியலில் பெயர்கள் நீக்கப்பட்ட விவகாரம்: தேர்தல் கமிஷன் அஜாக்கிரதை - ஆர்.எஸ்.பாரதி
x

வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும் என்று தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி கூறியுள்ளார்.

சென்னை,

தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்தது ஏன் என்பது பற்றி தி.மு.க. அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

வாக்குப்பதிவு சமயத்தில் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்ததால் சென்னையை பொறுத்தவரை பல பேர் வெளியூர் சென்றுவிட்டனர். அதனால் தான் வாக்குப்பதிவு குறைந்ததாக கருதுகிறோம்.

கேள்வி:- தமிழ்நாடு முழுவதும் பல தொகுதிகளில் வாக்குப்பதிவு சதவீதம் குறைந்துள்ளதே? வெயில் அதிகமாக இருந்ததால் பல பேர் ஓட்டு போட வரவில்லை என்று கூறுகிறார்களே?

ப:- வெயில் மட்டும் காரணம் கிடையாது. பொதுவாகவே ஒரு மாநில அரசு மீது வெறுப்பு இருந்தால் தான் வாக்குப்பதிவு அதிகமாகும். ஆனால் தமிழகத்தை பொறுத்தவரை தி.மு.க. அரசு மீது மக்களுக்கு வெறுப்பு கிடையாது. இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

கே:- வாக்காளர் பட்டியலில் நிறையபேர் பெயர்கள் விடுபட்டுள்ளதாக பொதுமக்கள் கூறுகிறார்களே?

ப:- ஆமாம். வாக்காளர் பட்டியலில் பெயர்கள் விடுபட்டுள்ளதை தேர்தல் கமிஷன் பார்த்திருக்க வேண்டும். தி.மு.க. சார்பில் நாங்கள் பலமுறை தேர்தல் கமிஷனில் வலியுறுத்தி இருக்கிறோம்.தி.மு.க. சார்பில் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை சேர்க்க வேண்டும் என்று தேர்தல் கமிஷன் கடைசியாக கூட்டிய அனைத்துக் கட்சி கூட்டத்தில் கூட சொன்னேன்.ஆனால் அவர்கள் கண்டு கொள்ளவில்லை. இதுபற்றி அப்போதே நான் பேட்டியும் கொடுத்திருந்தேன்.வாக்காளர் பட்டியலை தேர்தல் கமிஷன் சரிபார்த்திருக்க வேண்டும். ஆனால் அதை தவற விட்டார்கள்.

இது தேர்தல் கமிஷனின் அஜாக்கிரதை என்றுதான் சொல்ல வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story