திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை


திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை
x

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருச்சி

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். இதில் 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சிறப்பு முகாம்

திருச்சி மத்திய சிறை வளாகத்தில் வெளிநாடுகளை சேர்ந்தவர்களுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இந்த முகாமில் போலி பாஸ்போர்ட், போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய இலங்கை, வங்காளதேசம், பல்கேரியா, ருவாண்டா, தெற்கு சூடான் உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் தங்கள் மீதான வழக்குகளில் இருந்து ஜாமீன் பெற்றாலும், விடுதலையானாலும் அவர்களை சொந்த நாட்டுக்கு அனுப்பும் வரை முகாமிலேயே தங்க வைக்கப்படுவார்கள். கடந்த ஆண்டு ஜூலை மாதம் திருச்சி சிறப்பு முகாமில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் குழுவினர் 100-க்கும் மேற்பட்ட துணை ராணுவப்படையினருடன் அதிகாலையில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினார்கள். காலை முதல் மாலை வரை நடந்த இந்த சோதனையில் நூற்றுக்கணக்கான செல்போன்கள், ஏராளமான தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அதிரடி சோதனை

இதன் தொடர்ச்சியாக சிறப்பு முகாமில் செல்போன் பயன்படுத்துவதையும், மடிக்கணினி உள்ளிட்ட எலக்ட்ரானிக் பொருட்கள் பயன்படுத்துவதையும் போலீசார் கண்காணித்து வந்தனர். இது தொடர்பாக அவ்வப்போது மாநகர போலீசாரும் சிறப்பு முகாமுக்குள் சோதனை நடத்தி வந்தனர். இந்தநிலையில் நேற்று அதிகாலை 6.30 மணி அளவில் மாநகர போலீஸ் கமிஷனர் சத்தியப்பிரியா உத்தரவின்பேரில், துணை கமிஷனர்கள் ஸ்ரீதேவி, அன்பு ஆகியோர் தலைமையில் 6 உதவி கமிஷனர்கள் கொண்ட போலீசார், வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் மற்றும் வருவாய் துறையினர் இணைந்து 300-க்கும் மேற்பட்டோர் சிறப்பு முகாமிற்குள் அதிரடியாக புகுந்து சோதனை நடத்தினார்கள்.

4 செல்போன்கள் பறிமுதல்

இந்த சோதனையில் வெளிநாடுகளை சேர்ந்தவர்களிடம் இருந்து 4 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த செல்போன்கள் மூலம் அவர்கள் யார், யாரிடம் பேசினார்கள்? என போலீசார் விசாரித்து வருகிறார்கள். சுமார் ஒரு மணிநேரம் நடத்தப்பட்ட இந்த சோதனையால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story