போராட்டக்காரர்கள் விட்டுச்சென்ற பொருட்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரம்
கனியாமூர் கலவரத்தில் துப்புதுலக்குவதற்காக போராட்டக்காரர்கள் விட்டுச்சென்ற பொருட்களை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்
சின்னசேலம்
தனியார் பள்ளி
கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்-2 மாணவி ஸ்ரீமதி இறந்ததை அடுத்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இதில் போராட்டக்காரர்கள் பள்ளி வளாகம், விடுதி, வகுப்பு மற்றும் அலுவலகத்தை சூறையாடியதோடு, அங்கிருந்த வாகனங்களை தீ வைத்து கொளுத்தினர். இதில் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட மாணவர்களின் கல்வி சான்றுகள், ஆசிரியர்கள், பள்ளி வாகன ஓட்டுனர்கள் மற்றும் ஊழியர்களின் சான்றுகள் உள்ளிட்டவை எரிந்து சாம்பலானது. தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து சி.பி.சி.ஐ.டி. மற்றும் சிறப்பு புலனாய்வு குழு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீஸ் குழு
வன்முறை சம்பவம் தொடர்பான வீடியோ பதிவு, புகைப்படம் ஆகியவற்றை ஆதாரமாக கொண்டு போராட்டக்காரர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர். இது ஒருபக்கம் இருக்க பள்ளியில் இருந்து சுமார் 4 கிலோ மீ்ட்டர் தூரத்தில் போராட்டக்காரர்கள் வந்த வழித்தடத்தில் அவர்கள் விட்டு சென்ற மணிபர்ஸ், பெனா, சிம்கார்டு, செல்போன், விசிட்டிங்கார்டு, அடையாள அட்டைகள் போன்ற ஏதாவது கிடக்கிறதா? என்பதை கண்டறிந்து அவற்றை சேகரிப்பதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில் 10-க்கும் மேற்பட்ட போலீஸ் குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவினர் போராட்டக்காரர்கள் வந்து சென்ற வழித்தடமான சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலை, சென்னை- சேலம் தேசிய நெடுஞ்சாலை ஆகிய சாலையோரங்களில் கலவரகாரர்கள் விட்டு சென்ற பொருட்கள் ஏதேனும் கிடக்கிறதா? என பார்த்து அவற்றை சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.