தடுப்பு சுவரில் ஏறி நின்ற காரின் உரிமையாளருக்கு தர்ம அடி
ஓமலூர் அருகே தடுப்பு சுவரில் ஏறி நின்ற காரை மீட்க உதவியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதன் உரிமையாளருக்கு தர்ம அடி விழுந்தது. அவரை போலீசார் மீட்டனர்.
ஓமலூர்:-
ஓமலூர் அருகே தடுப்பு சுவரில் ஏறி நின்ற காரை மீட்க உதவியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அதன் உரிமையாளருக்கு தர்ம அடி விழுந்தது. அவரை போலீசார் மீட்டனர்.
தடுப்புச்சுவரில் ஏறிய கார்
சேலம் குரங்குச்சாவடியை சேர்ந்தவர் பாலாஜி. இவர் சேலத்தில் இரும்பு கடை வைத்து வியாபாரம் செய்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் மாலை ஓமலூர் அடுத்த காமலாபுரத்தில் உள்ள அரசு டாஸ்மாக் கடைக்கு காரில் வந்து மது அருந்தி விட்டு, காரை சேலம் நோக்கி ஓட்டி வந்ததாக கூறப்படுகிறது. காமலாபுரம் பிரிவு ரோடு பகுதியில் மேம்பால பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து நெரிசல் காணப்பட்டது. இதனால் காரை வலது பக்கம் திருப்பிச்செல்ல முயன்றுள்ளார்.
அப்போது மேம்பாலத்தின் தடுப்பு சுவர் மீது பாலாஜியின் கார் ஏறி நின்றது. இதைபார்த்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு வந்து உதவி செய்துள்ளனர்.
கைகலப்பு
அப்போது மதுபோதையில் காரில் இருந்து இறங்கிய பாலாஜி பொதுமக்களை ஆபாசமாக திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் பொதுமக்களுக்கும் அவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு ஏற்பட்டது. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படவே ஓமலூர் போலீசாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர்.
உடனே சம்பவ இடத்திற்கு வந்த போலீசாரையும், பொதுமக்களையும் அவர் தகாத வார்த்தையால் திட்டி தாக்க முயன்றுள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த அங்கு நின்ற வாலிபர்கள் பாலாஜியை சரமாரியாக தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்படவே பாலாஜியை போலீசார் மீட்டு ஓமலூர் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.