மூதாட்டியை படுகொலை செய்து நகை கொள்ளை; 2 பேர் கைது


மூதாட்டியை படுகொலை செய்து நகை கொள்ளை; 2 பேர் கைது
x

மதுகுடிக்க பணம் தேவைப்பட்டதால் மூதாட்டியை படுகொலை செய்து நகைகளை கொள்ளையடித்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆர்.கே.பேட்டை,

திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் எரும்பி கிராமத்தைச் சேர்ந்தவர் வள்ளியம்மாள் (வயது 85). தனியாக வசித்து வந்தார். இவருடைய மகன் ஓய்வுபெற்ற சப்-இன்ஸ்பெக்டர். அவர் குடும்பத்துடன் ஆவடியில் வசித்து வருகிறார்.

வள்ளியம்மாள் நேற்று காலை வெகு நேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது வள்ளியம்மாள் ரத்த வெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

மிளகாய் பொடியை தூவி...

சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஆர்.கே.பேட்டை போலீசார் வள்ளியம்மாள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலையாளிகள் மூதாட்டி மற்றும் வீடு முழுவதும் மிளகாய் பொடியை தூவி சென்றிருந்தனர்.

போலீசார் சந்தேகத்தின்பேரில் அதே பகுதியில் வசிக்கும் சதீஷ் (21) என்பவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் மூதாட்டி வள்ளியமாளை கொலை செய்ததையும், இதற்கு அதே கிராமத்தைச் சேர்ந்த வினோத்குமார் (28) உடந்தையாக இருந்ததாகவும் ஒப்புக்கொண்டார்.

வினோத் குமார் அந்த பகுதியில் உள்ள சலூன் கடையில் வேலை செய்து வருகிறார். சதீஷ் சோளிங்கரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். நண்பர்களான இவர்கள் குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி தாங்கள் குடிப்பதற்கு தேவையான பணத்தை சம்பாதிக்க திருட்டில் ஈடுபட முடிவெடுத்தனர்.

சதீஷ் தனது வீட்டிற்கு அருகே 3-வது வீட்டில் வசிக்கும் வள்ளியம்மாள் தனியாக வசிக்கிறார். அவர் கழுத்தில் எப்பொழுதும் நிறைய நகைகளை அணிந்து இருப்பார். எனவே அவரை கொலை செய்து விட்டு நகைகளை கொள்ளையடிக்கலாம் என வினோத்குமாருடன் சேர்ந்து திட்டம் போட்டார்.

கவரிங் நகை

அதன்படி நேற்று முன்தினம் இரவு இவர்கள் இருவரும் வள்ளியம்மாள் வீட்டு அருகே காத்திருந்தனர். அப்போது இரவில் வள்ளியம்மாள் வெளியே வந்தபோது அவரை செங்கல்லால் தலையில் தாக்கி, கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொன்றுவிட்டு அவர் அணிந்திருந்த நகைகளை திருடியதும், பின்னர் வீடு முழுவதும் மிளகாய் பொடி தூவி விட்டு தப்பி ஓடியதாக தெரிவித்தனர்.

இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்கள் கொள்ளையடித்த நகைகளை பறிமுதல் செய்து பரிசோதனை செய்தனர். அதில் அந்த நகைகள் அனைத்தும் கவரிங் நகைகள் என்று தெரியவந்தது.

சில மாதங்களுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட மூதாட்டி வள்ளியம்மாள் வீட்டின் முன்பு அமர்ந்து இருந்தபோது அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை மர்ம நபர்கள் பறித்து தப்பி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் 2 பேர் கைது செய்யப்பட்டு தங்க சங்கிலியை மீட்டு மூதாட்டியிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் நடந்த பிறகு வள்ளியம்மாள் தான் அணிந்திருந்த தங்க நகைகள் அனைத்தையும் ஆவடியில் உள்ள தனது மகனிடமும் கொடுத்துவிட்டு கவரிங் நகைகளை அணிந்துள்ளார். இது தெரியாமல் கொலையாளிகள் 2 பேரும் மூதாட்டி வள்ளியம்மாளை கொடூரமாக கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story