திருமழிசை புதிய பஸ் நிலையம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் - அமைச்சர் சேகர்பாபு தகவல்
25 ஏக்கரில் ரூ.336 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் திருமழிசை புதிய பஸ்நிலையம் அடுத்த ஆண்டு (2023) இறுதிக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
சென்னை மாநகரின் அசுர வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அதன் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையிலும், மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலம் புதிய பஸ் நிலையங்கள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன.
ஏற்கனவே சென்னை கோயம்பேடு மற்றும் மாதவரத்தில் புதிய பஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலைய கட்டுமானப்பணிகள் நிறைவு பெறும் தருவாயில் உள்ளன.
தமிழகத்தின் மேற்கு மாவட்டங்கள், கேரளா மற்றும் கர்நாடக மாநிலத்தில் இருந்து வரும் பஸ்களுக்காக திருமழிசை, குத்தம்பாக்கத்தில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் உருவாக்கப்பட்டு உள்ள துணைக்கோள் நகரத்தில் சுமார் 25 ஏக்கர் பரப்பளவில் ரூ.336 கோடி மதிப்பீட்டில் 4-வது புதிய பஸ் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
இதன் கட்டுமானப்பணிகளை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் ஆகியோர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இந்த ஆய்வின்போது, புதிய பஸ் நிலைய கட்டுமானப்பணிகளை விரைந்து முடித்து, அடுத்த ஆண்டு (2023) இறுதிக்குள் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையில் நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகளுக்கு, அமைச்சர் சேகர்பாபு அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வில் பூந்தமல்லி எம்.எல்.ஏ. கிருஷ்ணசாமி, வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை முதன்மை செயலாளர் அபூர்வா, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் அன்சுல் மிஸ்ரா, தலைமை செயல் அதிகாரி எம்.லட்சுமி உள்பட அதிகாரிகளும் பங்கேற்றனர்.