சென்னை மாநகராட்சி அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு
சென்னை,
சென்னை புளியந்தோப்பில் உள்ள மாநகராட்சி ஆஸ்பத்திரியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி ஜனகவள்ளி என்பவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டநிலையில் உயிரிழந்தார். இதேபோல், சேப்பாக்கம் மைதானம் எதிரே மழை நீர் வடிகால் பணியில் ஈடுபட்டிருந்த கனகராஜ் என்பவர் கால்வாயில் விழுந்து உயிரிழந்தார்.
இந்த 2 பேரின் உயிரிழப்புக்கும் நீதிகேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மற்றும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சார்பில் சென்னை மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று போராட்டம் நடந்தது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணனையும், மேயர் பிரியாவையும் சந்திக்க வேண்டும் எனக்கூறி மாநகராட்சி அலுவலகத்துக்கு உள்ளே நுழைந்தனர். அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் போராட்டக்காரர்களுக்கும் காவல் துறையினருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டு வாக்குவாதம் முற்றியது.
இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் மாநகராட்சி அதிகாரி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்படாததையடுத்து போராட்டக்காரர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, போலீசார் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 75 பேரை கைது செய்தனர்.