அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது
முத்தையாபுரத்தில் அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
ஸ்பிக்நகர்:
தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் உத்தரவின் பேரில் தூத்துக்குடி உட்கோட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சத்தியராஜ் மேற்பார்வையில் முத்தையாபுரம் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ராஜபிரபு ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முத்தையாபுரம் தோப்பு தெரு ஜங்சன் பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் முத்தையாபுரம் அய்யன் கோவில் தெருவை சேர்ந்த குஞ்சரவேல் மகன் உமையார்தங்கம் (வயது 25) என்பதும், அவர் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு தகராறு செய்து அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் உமையார்தங்கத்தை கைது செய்தனர். மேலும் இதுகுறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.