எந்திரம் உடைந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலி


எந்திரம் உடைந்து விழுந்து வடமாநில தொழிலாளி பலி
x
தினத்தந்தி 18 Oct 2023 12:15 AM IST (Updated: 18 Oct 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

நித்திரவிளை அருகே துறைமுக பணிக்காக ராட்சத சிமெண்ட் கல் தயாரித்த போது எந்திரம் உடைந்து விழுந்து வடமாநில தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

கன்னியாகுமரி

கொல்லங்கோடு,

நித்திரவிளை அருகே இரையுமன்துறை பகுதியில் தேங்காப்பட்டணம் துறைமுக மறுசீரமைப்பு பணிக்காக கோர்லாக் கற்கள் எனப்படும் ராட்சத சிமெண்டு கற்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று மதியம் பொக்லைன் எந்திரம் மூலம் கோர்லாக் கற்கள் தயாரிக்கும் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் சிமெண்ட் கற்களின் பாகங்களை தூக்கி வைத்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக எந்திரத்தின் இரும்பு அச்சு உடைந்து கீழே நின்று கொண்டிருந்த அஸ்ஸாம் மாநிலத்தை சேர்ந்த தொழிலாளி கிக்கிந்தர் (வயது25) மீது விழுந்தது.

பரிதாப சாவு

இதில் கிக்கிந்தர் படுகாயம் அடைந்தார். அவரை சக தொழிலாளர்கள் மீட்டு மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக குழித்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து நித்திரவிளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story