சனாதனம் குறித்து பேசிய விவகாரம் - சென்னை ஐகோர்ட்டில் வழக்குகள் முடித்து வைப்பு
மனுதாரரின் கோரிக்கை அடிப்படையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
சென்னை,
சென்னையில் கடந்த ஆண்டு நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், டெங்கு, மலேரியா போல் சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டும் என்று பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்தனர். இந்த மாநாட்டில் தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுவும் கலந்து கொண்டிருந்தார்.
இதே போல் தி.மு.க. எம்.பி. ஆ.ராசாவும் சனாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசி வருவதாகவும், எந்த தகுதியின் அடிப்படையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, தி.மு.க. எம்.பி. ஆ.ராசா ஆகியோர் பதவியில் நீடிக்கிறார்கள் என்பது குறித்து விளக்கமளிக்க உத்தரவிடக்கோரியும் இந்து முன்னணி நிர்வாகிகள் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் கோ-வாரண்டோ வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த வழக்குகளை விசாரித்த நீதிபதி அனிதா சுமந்த், கடந்த ஆண்டு நவம்பர் 23-ந்தேதி வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்த நிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பை அறிவித்தார். இதன்படி, இந்த வழக்கில் மனுதாரர் கேட்கும் கோரிக்கையின் அடிப்படையில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பாக நாடு முழுவதும் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டு நிலுவையில் உள்ளதாகவும், அதில் எதிலும் தண்டனை அறிவிக்கப்படவில்லை என்றும் நீதிபதி தெரிவித்தார். தொடர்ந்து இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தி.மு.க. எம்.பி. வில்சன், மனுதாரரின் கோ-வாரண்டோ வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல என்று கூறி நீதிபதி வழக்குகளை முடித்துவைத்ததாவும், இது தங்களது தரப்புக்கு கிடைத்த மகத்தான வெற்றி என்றும் குறிப்பிட்டார்.