இடைக்கால விசாரணை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும்


இடைக்கால விசாரணை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும்
x
தினத்தந்தி 24 Jun 2023 1:00 AM IST (Updated: 24 Jun 2023 1:00 AM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், இடைக்கால விசாரணை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் என்று ஊட்டி கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

நீலகிரி

ஊட்டி

கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில், இடைக்கால விசாரணை அறிக்கை அடுத்த மாதம் தாக்கல் செய்யப்படும் என்று ஊட்டி கோர்ட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் தெரிவித்தனர்.

கோடநாடு வழக்கு

நீலகிரி மாவட்டம் கோடநாடு எஸ்டேட்டில் கடந்த 24.4.2017-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார். மேலும் எஸ்டேட் பங்களாவில் இருந்த பொருட்கள் கொள்ளை அடிக்கப்பட்டது. இதுதொடர்பாக சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகிய 10 பேரை கோத்தகிரி போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றத்துக்கு பின்னர், 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. 316 பேரிடம் மறு விசாரணை நடத்தப்பட்டது. இந்தநிலையில் கோடநாடு வழக்கு விசாரணை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணைக்கு மாற்றப்பட்டது.

கோர்ட்டில் ஆஜர்

இதையடுத்து தனிப்படை போலீசார், சீல் வைக்கப்பட்ட விசாரணை ஆவணங்களை ஊட்டி கோர்ட்டில் நீதிபதியிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து கோவை சி.பி.சி.ஐ.டி. கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகவேல் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அவரது குழுவில் 49 பேர் நியமிக்கப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நேற்று ஊட்டி ஒருங்கிணைந்த புதிய கோர்ட்டில் கோடநாடு வழக்கு விசாரணைக்கு வந்தது. சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, ஜித்தின் ஜாய் ஆகிய 4 பேர் ஆஜராகினர். அரசு தரப்பில் வக்கீல்கள் ஷாஜகான், கனகராஜ் மற்றும் சி.பி.சி.ஐ.டி. தரப்பில் கூடுதல் சூப்பிரண்டு முருகவேல், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் சந்திரசேகர், அண்ணாதுரை மற்றும் போலீசார் ஆஜராகினர்.

நீதிபதி கேள்வி

வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி அப்துல் காதர், சி.பி.சி.ஐ.டி. போலீசார் இடைக்கால விசாரணை அறிக்கையை ஏன் தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பினார். இதையடுத்து அடுத்த மாதம் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட தரப்பு வக்கீல் விஜயன், கோடநாடு கொலை சம்பவம் நடந்த இடத்தில் மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என்று வாதாடினார். அவரது கோரிக்கையை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லை.

அதேபோல் வாளையார் மனோஜ் குடும்பத்தினர் விசாரணை என்ற பெயரில் துன்புறுத்தப்படுவதாக வக்கீல் முனியசாமி நீதிபதியிடம் தெரிவித்தார். அவர்களது குடும்பத்தினர் துன்புறுத்தப்படவில்லை என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தள்ளி வைப்பு

தொடர்ந்து சாட்சிகள் தொடர்பாக புலன் விசாரணை மேற்கொள்ள வெளிமாநிலம் செல்லவும், தகவல் பரிமாற்ற ஆய்வுக்காகவும் அரசு தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது. பின்னர் வழக்கு விசாரணையை வருகிற ஜூலை 28-ந் தேதிக்கு தள்ளி வைத்து மாவட்ட நீதிபதி அப்துல் காதர் உத்தரவிட்டார். அவர் மாவட்ட நீதிபதியாக பொறுப்பேற்ற பின்னர் முதல் முறையாக கோடநாடு வழக்கு விசாரணையை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.


Next Story