அழகர்கோவிலில் சாலை அமைக்கும் பணியை வனத்துறையினர் தடுத்ததால் பரபரப்பு
அழகர்கோவிலில் சாலை அமைக்கும் பணியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அழகர்கோவில்
அழகர்கோவிலில் சாலை அமைக்கும் பணியை வனத்துறையினர் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
வனத்துறையினர் தடுத்தனர்
மதுரை மாவட்டம் அழகர் கோவிலில் உள்ள கள்ளழகர் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலில் இருந்து அழகர் மலை நூபுரகங்கை சாலை சுமார் 4 கி.மீ. தூரம் உள்ளது. சட்டமன்ற அறிவிப்பின்படி வண்டி கேட் நுழைவு வாயில் முதல் ராக்காயி அம்மன் கோவில் வரை ரூ.9 கோடியே 10 லட்சம் வரை நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நேற்று தொடங்கியது. ஆனால் வனத்துறையிடம் உரிய அனுமதி பெறவில்லை எனக்கூறி திண்டுக்கல் வன அதிகாரி ஆலோசனையின் பேரில் வேம்பரளி வனத்துறை அதிகாரிகள் நேரில் வந்து பொக்லைன் எந்திரம் மூலம் பணிகள் நடைபெறுவதை தடுத்து நிறுத்தி எந்திரத்தை பறிமுதல் செய்தனர்.
அப்போது கோவில் அறநிலையத்துறை அதிகாரிகள், வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் பதட்டம் ஏற்பட்டது. தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டது. மேலும் அழகர் மலையில் உள்ள முருகன் கோவில், ராக்காயி அம்மன் கோவிலுக்கு செல்லும் வாகனங்களும், பக்தர்களும் அனுமதி மறுக்கப்பட்டனர். இதனால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
பரபரப்பு
இதை தொடர்ந்து சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அழகர்கோவிலுக்கு வந்து முகாமிட்டிருந்தனர். இந்த மலை சாலை கடந்த 1976-ம் ஆண்டும், 2000-ம் ஆண்டும் போடப்பட்டது. அதற்கு பிறகு நேற்று தார்சாலை போடுவதற்கு கோவில் நிர்வாகத்திலிருந்து பணிகள் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் சாலை பணி நிறுத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அரசின் உயர் அதிகாரிகளுக்கும் கோவில் நிர்வாகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.