திருநள்ளாறில் பிரபல கோவிலின் கொடிமரம் முறிந்து விழுந்தது - பக்தர்கள் அதிர்ச்சி
பிரம்மோற்சவ விழா தொடக்கமாக கொடியேற்றும் நேரத்தில் திருநள்ளாறு நள நாராயண பெருமாள் கோவிலின் கொடி மரம் முறிந்து விழுந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
காரைக்கால்,
திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர் கோவிலை சேர்ந்த ஸ்ரீ நளபுரநாயகி சமேத ஸ்ரீ நள நாராயண பெருமாள் கோவில், அதிக பக்தர்களை ஈர்க்கும் கோவிலாக விளங்குகிறது.
இக்கோவிலில் உள்ள ஸ்ரீ திரிநேத்ர தசபுஜ பஞ்சமுக வீர ஆஞ்சனேயரை வழிபட ஏராளமான பக்தர்கள் வருகை தருகின்றனர்.
ஆண்டுதோறும் நடைபெறக்கூடிய பிரம்மோற்சவம் நிகழாண்டு கொடியேற்றத்துடன் இன்று காலை 9 முதல் 10.30-க்குள் தொடங்குவதற்கான பூஜை நடைபெற்றது. கொடி மரத்தை தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, திடீரென கொடிமரம் முறிந்து விழுந்தது. இது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உரிய பராமரிப்பு இல்லை என பக்தர்கள் பலரும் கோவில் நிர்வாகத்தை கண்டித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனால் திருநள்ளாறு ஸ்ரீ நளபுர நாயகி சமேத நள நாராயண பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் திட்டமிட்ட நேரத்தில் கொடியேற்றத்துடன் தொடங்கவில்லை. மாற்று ஏற்பாடு செய்வதற்கான பணிகளில் கோவில் நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.