ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
வடமதுரை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் ஆடித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வடமதுரையில் உள்ள சவுந்தரராஜ பெருமாள் கோவில் ஆடித்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதன் முன்னதாக காலை 9 மணியளவில் விஷ்வக்சேனருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, கருடாழ்வார் படம் வடமதுரை நகரின் முக்கிய வீதிகளில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு சன்னதியை அடைந்தது. பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக கொடிமரம் அருகில் அமர்ந்தார். அதன்பின்னர் புண்யாவாஜனம், கலச பூஜை செய்யப்பட்டு கொடி மரத்தில் திருக்கொடி ஏற்றப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபட்டனர். அதன்பின்னர் இரவு 9 மணி அளவில் அனுமார் வாகனத்தில் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
விழாவில் ஆகஸ்டு மாதம் 5-ந்தேதி வரை பல்வேறு மண்டகப்படி தாரர்களின் கலை நிகழ்ச்சிகளோடு ஒவ்வொரு நாளும் சிம்மம், கருடன், சேஷன், யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் பெருமாள் வீதி உலா நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. ஆடி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம் வருகிற 30-ந்தேதியும், தேரோட்டம் அடுத்த மாதம் (ஆகஸ்டு) 1-ந்தேதியும், வசந்தம் முத்துப்பல்லாக்கு 3-ந்தேதியும் நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் விஸ்வநாத், செயல்அலுவலர் முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர்.