'ஆரஞ்ச் அலார்ட்' என்ற பெயரில் போலீசார் நடத்திய ஒத்திகை
குற்றச்சம்பவங்களை தடுக்க ஆரஞ்சு நிற அலார்ட் என்ற பெயரில் கோவை மாநகர் முழுவதும் போலீசாரின் திடீர் வாகன சோதனை ஒத்திகை நடைபெற்றது.
குற்றச்சம்பவங்களை தடுக்க ஆரஞ்சு நிற அலார்ட் என்ற பெயரில் கோவை மாநகர் முழுவதும் போலீசாரின் திடீர் வாகன சோதனை ஒத்திகை நடைபெற்றது.
ஆரஞ்சு நிற அலார்ட் ஒத்திகை
கோவை மாநகரில் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் நேற்று மாலை ஆரஞ்சு நிற அலார்ட் என்ற பெயரில் திடீரென வாகன சோதனை ஒத்திகை நடைபெற்றது.
மாநகர போலீஸ் துணை கமிஷனர்கள் சந்தீஷ், சண்முகம் ஆகியோர் தலைமையில் 800-க்கும் மேற்பட்ட போலீசார் முக்கிய சாலைகளின் சந்திப்பு பகுதி, பொதுமக்கள் அதிகளவு நடமாடும் பகுதிகள், குற்றச்சம்பவங்கள் அதிகளவு நடக்கும் இடங்கள் என மொத்தம் 120 இடங்களில் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.
அச்சமடைந்த வாகன ஓட்டிகள்
இந்த சோதனையின்போது போலீசார் மோட்டார் சைக்கிள், கார், பஸ், லாரி உள்பட அனைத்து வாகனங்களையும் அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர். மேலும் வாகனங்களில் வந்தவர்களின் அடையாள அட்டை, டிரைவரின் ஓட்டுனர் உரிமம், வாகனத்தின் பதிவுச்சான்று போன்ற ஆவணங்களை பரிசோதித்த பின்னரே அனுப்பி வைத்தனர்.
திடீரென போலீசாரின் வாகன தணிக்கை நடைபெற்றதால் சாலைகளில் சென்ற வாகன ஓட்டிகள் கோவையில் ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடந்து உள்ளனவோ என்று அச்சம் அடைந்தனர். அப்போது போலீசார் அவர்களிடம் இது குற்றச்சம்பவங்களை தடுப்பதற்காக ஆரஞ்சு நிற அலார்ட் வாகன சோதனை ஒத்திகை என்று கூறினர். அதன்பின்னரே வாகன ஓட்டிகள் நிம்மதி அடைந்தனர்.
காரணம் என்ன?
இதுகுறித்து மாநகர போலீஸ் துணை கமிஷனர் சந்தீஷ் கூறியதாவது:-
குற்றச்சம்பவங்களில் ஈடுபட்டுவிட்டு தப்பியவர்களை பிடிப்பதற்காகவும், குற்றச்சம்பவங்களை தடுக்கவும் ஆரஞ்சு நிற அலார்ட் என்ற பெயரில் திடீர் வாகன சோதனை ஒத்திகை நடத்தப்பட்டது. பொதுவாக ஏதேனும் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றால் சிவப்பு நிற அலார்ட், ஆரஞ்சு நிற அலார்ட் மற்றும் மஞ்சள் நிற அலார்ட் ஆகிய 3 வகையிலான எச்சரிக்கை விடுக்கப்படும்.
இந்த எச்சரிக்கை பெரும்பாலும் கடலோர மாவட்டங்கள், கனமழை, பேரிடர் காலங்களில் விடுக்கப்படும். அதுபோன்று தற்போது போலீஸ்துறையில் கொண்டு வந்து ஒத்திகை நடத்தப்பட்டது.
தமிழ்நாட்டில் முதல் முறை
ஒரு இடத்தில் கொள்ளை அல்லது வழிப்பறி சம்பவம் நடந்தால் உடனே போலீசாரை உஷார்படுத்தி குற்றவாளியை உடனே பிடிப்பதற்காக ஆரஞ்சு நிற அலார்ட் அறிவிக்கப்படும். இதன் மூலம் போலீசார் அதிரடியாக வாகன தணிக்கையில் ஈடுபடுவார்கள். தற்போது கோவையில் தான் தமிழ்நாட்டிலேயே முதல் முறையாக நடத்தப்பட்டுள்ளது.
இந்த ஒத்திகையின்போது ஆர்.எஸ்.புரம் பகுதியில் ஒருவர் வழிப்பறி சம்பவத்தில் ஈடுபட்டுவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்செல்வது போன்று போலீஸ்காரர் ஒருவர் நடித்தவாறு சென்றார். அவரை ஆரஞ்ச் நிற அலார்ட் சோதனையில் ஈடுபட்ட போலீசார் மடக்கிப்பிடித்தனர். இந்த ஒத்திகையானது வெற்றிகரமாக நடைபெற்றது.
இவ்வாறு அவர் கூறினார்.