கிணற்றில் குதித்த போதை ஆசாமி
பொள்ளாச்சி அருகே கை தவறி விழுந்த செல்போனை எடுக்க கிணற்றில் குதித்த போதை ஆசாமியை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
பொள்ளாச்சி
பொள்ளாச்சி அருகே கை தவறி விழுந்த செல்போனை எடுக்க கிணற்றில் குதித்த போதை ஆசாமியை தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்.
தண்ணீரில் தத்தளித்தார்
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குள்ளக்காபாளையம் செல்லும் சாலையோரத்தில் கிணறு ஒன்று உள்ளது. 30 அடி ஆழம் கொண்ட அந்த கிணற்றில் 20 அடிக்கு தண்ணீர் உள்ளது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் அந்த கிணற்றில் இருந்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்ற சத்தம் கேட்டது. இதை அந்த வழியாக சென்றவர்கள் கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனே கிணற்றுக்குள் எட்டி பார்த்தனர். அப்போது கிணற்றின் சுற்றுச்சுவர் கல்லை பிடித்துக்கொண்டு ஒருவர் தண்ணீரில் தத்தளிப்பது தெரியவந்தது.
மழை பெய்ததால் தாமதம்
பின்னர் அவர்கள் பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் நிலைய அலுவலர் கணபதி தலைமையில் வீரர்கள் விரைந்து வந்தனர். தொடர்ந்து கயிறு கட்டி அவரை மீட்க முயன்றனர். ஆனால் தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்ததாலும், போதிய வெளிச்சம் இல்லாததாலும் அவரை மீட்பதில் தாமதம் ஆனது.
எனினும் அதை பொருட்படுத்தாமல் தீயணைப்பு வீரர் மகேந்திரன், சக வீரர்கள் உதவியுடன் கயிறை பிடித்துக்கொண்டு கிணற்றுக்குள் இறங்கினார். பின்னர் தண்ணிரில் தத்தளித்த நபர் மீது கயிறை கட்டினார். தொடர்ந்து அவரை கிணற்றின் மீது நின்ற வீரர்கள் பத்திரமாக மீட்டனர். பின்னர் கிணற்றுக்குள் இறங்கிய வீரர் மகேந்திரனும் கயிறு மூலம் வெளியே ஏறி வந்தார்.
குடிபோதையில்...
இதையடுத்து சுமார் 1 மணி நேரம் போராடி மீட்கப்பட்ட நபரிடம், தீயணைப்பு வீரர்கள் விசாரணை நடத்தினார்கள். அதில் அவர் அதே பகுதியை சேர்ந்த தொழிலாளி ஜெயக்குமார் என்பதும், குடிபோதையில் கிணற்றின் அருகில் நின்று செல்போன் பேசிக்கொண்டு இருந்ததும், அப்போது கை தவறி செல்போன் கிணற்றுக்குள் விழுந்ததால் அதை எடுக்க உள்ளே குதித்ததும் தெரியவந்தது. அவருக்கு அறிவுரை கூறி தீயணைப்பு வீரர்கள் அனுப்பி வைத்தனர்.