தாளவாடியில் தொடரும் அட்டகாசம்:'கருப்பன்' யானையை பிடிக்க மீண்டும் அழைத்து வரப்பட்ட கும்கி யானைகள்


தாளவாடியில் தொடரும் அட்டகாசம்:கருப்பன் யானையை பிடிக்க மீண்டும் அழைத்து வரப்பட்ட கும்கி யானைகள்
x

தாளவாடி பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்யும் ‘கருப்பன்’ யானையை பிடிக்க மீண்டும் கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன.

ஈரோடு

தாளவாடி

தாளவாடி பகுதியில் தொடர்ந்து அட்டகாசம் செய்யும் 'கருப்பன்' யானையை பிடிக்க மீண்டும் கும்கி யானைகள் அழைத்து வரப்பட்டுள்ளன.

கருப்பன் யானை

சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட தாளவாடி வனச்சரகத்தில் ஏராளமான யானைகள் காணப்படுகின்றன. தண்ணீர் மற்றும் தீவனம் தேடி யானைகள் அடிக்கடி காட்டை விட்டு வெளியேறி கிராமங்களுக்கு படையெடுத்து வருகின்றன. குறிப்பாக 'கருப்பன்' என்று அழைக்கப்படும் ஒற்றை யானை கடந்த ஒரு வருடமாக ஜீர்கள்ளி வனப்பகுதியில் இருந்து வெளியேறி தாளவாடி அருகே உள்ள கிராமங்களுக்குள் புகுந்து தோட்டத்து பயிர்களை நாசம் செய்து வருகிறது.

இதேபோல் தோட்டத்தில் காவலுக்கு இருந்த 2 விவசாயிகளையும் மிதித்து கொன்றுவிட்டது. இதனால் 'கருப்பன்' யானையை பிடிக்க வேண்டும் என்று விவசாயிகள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினார்கள்.

மயக்க ஊசி

இதையடுத்து கருப்பன் யானையை பிடிக்க கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமில் இருந்து கலீம், அரிசி ராஜா, கபில்தேவ் என்ற 3 கும்கி யானைகள் கடந்த ஜனவரி மாதம் 13-ந் தேதி அழைத்து வரப்பட்டன. கும்கி யானைகள் கருப்பன் யானையை சுற்றி வளைத்தபோது, மருத்துவ குழுவினர் 2 முறை மயக்க ஊசிகள் செலுத்தினார்கள்.

ஆனால் கருப்பன் யானைக்கு மயக்கம் வரவில்லை. மேலும் அடர்ந்த காட்டுக்குள் ஓடிவிட்டது. இதனால் கருப்பன் யானையை பிடிக்கும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. பின்னர் ஜனவரி 29-ந் தேதி கும்கி யானைகள் மீண்டும் டாப்சிலிப் வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டன.

கும்கிகள் வரவழைப்பு

இந்தநிலையில் தாளவாடி பகுதியில் தொடர்ந்து கருப்பன் யானையின் அட்டகாசம் அதிகரித்தது. இரவு நேரங்களில் காட்டை விட்டு வெளியேறி தோட்டங்களுக்குள் புகுந்து பயிர்களை நாசம் செய்தது. ஜோரகாடு, கரளவாடி, திகனாரை கிராமங்களில் கருப்பன் யானையால் பல ஏக்கர் பரப்பளவிலான பயிர்கள் நாசமாயின.

இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகளும், கிராம மக்களும் கருப்பன் யானையை மீண்டும் பிடிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.. இதை ஏற்று நேற்று முன்தினம் இரவு மீண்டும் டாப்சிலிப் முகாமில் இருந்து பொம்மன், சுஜய் என்ற 2 கும்கி யானைகள் தாளவாடிக்கு லாரியில் ஏற்றி அனுப்பப்பட்டன. நேற்று அதிகாலை 4 மணி அளவில் கும்கி யானைகள் வந்து சேர்ந்தன.

இதையடுத்து வனத்துறையினர் மற்றும் கால்நடை டாக்டர்கள் கொண்ட குழு அமைத்து கருப்பன் யானையை மயக்க ஊசி செலுத்தி விரைவில் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Related Tags :
Next Story