பற்களை பிடுங்கிய விவகாரத்தில் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்த வேண்டும்-காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தினர் வலியுறுத்தல்


பற்களை பிடுங்கிய விவகாரத்தில் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்த வேண்டும்-காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தினர் வலியுறுத்தல்
x

பற்களை பிடுங்கிய விவகாரத்தில் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என்று காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

திருநெல்வேலி

காவல் சித்ரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் சார்பில் மக்கள் கண்காணிப்பு இயக்குனர் ஹென்றிடிபேன் நெல்லையில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நெல்லை மாவட்டம் அம்பை உட்கோட்டத்திற்கு உள்பட்ட போலீஸ் நிலையங்களில் பல்வேறு வழக்குகளில் விசாரணைக்கு வருபவர்களை அம்பை உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்பீர் சிங் பொறுப்பேற்ற நாளில் இருந்து சித்ரவதை செய்துள்ளார். இதனை பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலம் மற்றும் சம்பந்தப்பட்டவர்களின் சாட்சிகள் மூலம் அறிய முடிகிறது. இதுவரை 48 நபர்களின் பற்கள் உடைக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

இந்த நிகழ்வில் சம்பவம் நடந்த உடனேயே அங்கு போலீஸ் நிலையத்தில் பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை மாவட்ட நிர்வாகம் பெற்று இருக்க வேண்டும். இந்த சம்பவம் குறித்து மாவட்ட நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் நடந்த சம்பவங்களை சாட்சியமாக தெரிவிக்க வருபவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும். உச்ச நீதிமன்றம் ஏற்கனவே தெரிவித்த விசாரணை தொடர்பான உத்தரவுகளை போலீஸ் நிலையங்கள் சரியாக பின்பற்றுகிறதா? என்பதை அரசு கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாநில குழு உறுப்பினர் பாஸ்கரன், மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் லட்சுமணன், காங்கிரஸ் மாவட்ட பொதுச் செயலாளர் மகேந்திர பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் கரிசல் சுரேஷ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் ரசூல் மைதீன், எழுத்தாளர் நாறும்பூநாதன் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story