திட்டப்பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு
காட்பாடி உட்கோட்டத்தில் நடைபெறும் திட்டப்பணிகளை கண்காணிப்பு பொறியாளர் ஆய்வு செய்தார்.
காட்பாடி நெடுஞ்சாலைத்துறை உட்கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருவலம்- காட்பாடி- வெங்கடகிரிகோட்டா சாலை 7 கிலோமீட்டர் தூரத்திற்கு 4 வழி சாலையாக அகலப்படுத்தும் பணிக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது.
அதேபோல சேவூர்- சானிடோரியம்- கண்டிப்பேடு சாலை 2.4 கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு வழித்தட சாலையை இரு வழித்தட சாலையாக அகலப்படுத்தும் பணிக்கு ரூ.2.46 கோடியும், வண்டறந்தாங்கல் -கே.வி.குப்பம் சாலையை புதிய தார் சாலையாக புதுப்பிக்கும் பணிக்கு ரூ.1.53 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிவடைந்துள்ளது.
இதேபோல பள்ளிகொண்டா- பலமநேர் சாலையில் வேப்பூர் கூட்ரோடு அருகே சாலை சந்திப்பு மேம்பாடு செய்தல் பணிக்காக ரூ.2.15 கோடி என முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த சாலை உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பணிகள் நடைபெற்று முடிந்துள்ளது.
இந்த பணிகளை திருவண்ணாமலை வட்ட கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல் நேற்று ஆய்வு செய்தார். ஆய்வின்போது வேலூர் கோட்ட பொறியாளர் தனசேகரன், காட்பாடி உட்கோட்ட பொறியாளர் சுகந்தி, வேலூர் தரகட்டுப்பாட்டு உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன், உதவி பொறியாளர்கள் பூவரசன், அசோக்குமார், பூபதிராஜா மற்றும் நெடுஞ்சாலை துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.