அரசு பள்ளியில் சமையல் அறை கட்டும் பணி தொடங்கியது
தினத்தந்தி செய்தி எதிரொலி: அரசு பள்ளியில் சமையல் அறை கட்டும் பணி தொடங்கியது
கண்டாச்சிமங்கலம்
தியாகதுருகம் அருகே கொங்கராயபாளையம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கடந்த 5 ஆண்டுகளாக சைக்கிள் நிறுத்துவதற்காக ஒதுக்கப்பட்ட இடம் சமையல் அறையாக பயன்படுத்தப்பட்டு வந்தது. இதனால் சமையல் செய்யும் இடத்தில் குரங்குகள் மற்றும் நாய்கள் ஆகியவை ஜன்னல் வழியாக உள்ளே சென்று உணவு பொருட்களை சேதப்படுத்தியதால் சமையலர்கள் வேதனை அடைந்தனர். இதையடுத்து பொது நிதியில் இருந்து ரூ.5 லட்சத்து 65 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்தும் கடந்த 8 மாதங்களாக பணி தொடங்காமல் இருந்து வந்தது.
இதுபற்றிய செய்தி-படம் தினத்தந்தியில் கட்டுரையாக பிரசுரிக்கப்பட்டது. இதையடுத்து தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய உதவி பொறியாளர் விஜயன், பணி மேற்பார்வையாளர் சந்திரசேகர் ஆகியோர் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளிக்கு சென்று சமையல் அறை கட்டுவதற்கான இடத்தை தேர்வு செய்தனர். தொடர்ந்து சமையல் அறை கட்டுவதற்காக பொக்லைன் எந்திரம் மூலம் பள்ளம் தோண்டும் பணி தொடங்கியது. இதை அறிந்து பள்ளி சமையலர்கள், மாணவ-மாணவிகள், பொதுமக்கள் தினத்தந்தி நாளிதழுக்கு நன்றி தெரிவித்தனர்.