ஆலங்குட்டை ஓடையின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது
கச்சிராயப்பாளையம் ஆலங்குட்டை ஓடையின் குறுக்கே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது போக்குவரத்து மாற்றம்
கச்சிராயப்பாளையம்
கச்சிராயப்பாளையம் பழைய பஸ் நிலையத்தில் இருந்து புதிய பஸ் நிலையம் இடையே ஆலங்குட்டை ஓடை உள்ளது. இதில் கச்சிராயப்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அம்மாபேட்டை, மாதவச்சேரி, கரடிசித்தூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் ஆலங்குட்டை ஓடை தரைப்பாலத்தை கடந்து தான் சென்று வர வேண்டும். சுமார் 100 ஆண்டுகள் பழமையான இந்த தரை பாலம் வழியாக தினமும் நூற்றுக்கும் மேற்பட்ட பஸ், கார், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் மழை காலங்களில் தரைப்பாலத்தை மூழ்கடித்தபடி தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பாலம் சேதம் அடைந்தது. மேலும் வெள்ள காலங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் தரைப்பாலத்தை மேம்பாலமாக அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று தமிழ்நாடு அரசு மேம்பாலம் அமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்ததை அடுத்து நெடுஞ்சாலைத்துறை மூலம் பாலம் கட்டும் பணி தொடங்கி உள்ளது. இதற்கு முதல் கட்டமாக ஓடையின் குறுக்கே உள்ள தரைப்பாலத்தை பொக்லைன் எந்திரம் மூலம் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. பாலம் கட்டும் பணிகள் நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இரு சக்கர வாகனங்கள் வடக்கநந்தல் சிவன் கோவில் வழியாக சென்று புதிய பஸ் நிலையம் வந்து அதன் பிறகு கிராமங்களுக்கு செல்ல வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதேபோல் பஸ்கள் கல்வராயன்மலை சாலை வழியாக பதிகம் சென்று எடுத்தவாய்நத்தம், மாத்தூர் வழியாக மண்மலை கா.செல்லம்பட்டு கிராமங்களுக்கு செல்லவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.