300 புத்தகங்களை நூலகத்துக்கு வழங்கிய தலைமை செயலாளர்


300 புத்தகங்களை நூலகத்துக்கு வழங்கிய தலைமை செயலாளர்
x

பொது நிகழ்ச்சி, விழாக்களின் போது தனக்கு வழங்கப்பட்ட 300 புத்தகங்களை தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு நூலகத்துக்கு வழங்கினார்.

சென்னை,

செய்தி மக்கள் தொடர்புத்துறையின் மணிமண்டபங்களில் உள்ள நூலகங்களில் அமர்ந்து போட்டித் தேர்வுக்கு தயார் செய்யும் மாணவர்களின் வசதிக்காக முதற்கட்டமாக தர்மபுரி, மதுரை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், தூத்துக்குடி, நெல்லை, கடலூர், திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைந்துள்ள 10 மணி மண்டபங்களில் உள்ள நூலகங்களில் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்படுத்துவதற்கு ரூ.1 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

சென்னையில் செய்தித்துறை கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மணிமண்டபங்களில் உள்ள நூலகங்களை தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, நூலகங்களில் போட்டித்தேர்வுக்கு தயாராகும் மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் அறிவு சார்ந்த புத்தகங்கள் அதிகமாக இடம்பெற வேண்டும் என அதிகாரிகளை கேட்டுக்கொண்டார்.

இந்தநிலையில் பொது நிகழ்ச்சி மற்றும் விழாக்களின் போது தனக்கு வழங்கப்பட்ட 300-க்கும் மேற்பட்ட அறிவு சார்ந்த புத்தகங்களை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை செயலாளர் செல்வராஜ் மற்றும் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் மோகன் ஆகியோரிடம் தலைமை செயலாளர் வெ.இறையன்பு வழங்கினார்.

இந்த புத்தகங்கள் மணிமண்டபங்களில் உள்ள நூலகங்களுக்கு பிரித்து அனுப்பப்பட உள்ளதாகவும், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் நூலகங்களை பயன்படுத்தி பயன்பெறுமாறும் செய்தி மக்கள் தொடர்புத்துறை கேட்டுக்கொண்டுள்ளது.


Next Story