மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு மத்திய அரசு குறைந்த தொகையை ஒதுக்கியுள்ளது - செல்வப்பெருந்தகை


மெட்ரோ ரெயில் திட்ட பணிகளுக்கு மத்திய அரசு குறைந்த தொகையை ஒதுக்கியுள்ளது - செல்வப்பெருந்தகை
x

மோடி அரசின் மாநில விரோத போக்கு கூட்டாட்சி முறைக்கு கடும் கேடு விளைவிக்கக் கூடியதாகும் என செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்

சென்னை,

தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது,

சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்திற்கு மத்திய அரசு நிதி ஒதுக்க சம்மதம் தெரிவித்துள்ளதாக செய்தி வெளிவந்துள்ளன.சமீபத்தில் தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து வலியுறுத்திய பிறகு தற்போது மத்திய அரசின் 12 சதவிகித பங்களிப்பான ரூபாய் 7425 கோடியை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால், கடும் நிதி நெருக்கடிகளுக்கிடையே சென்னை மாநகர மக்களின் போக்குவரத்தை எளிதாக்குவதற்கு இதுவரை தமிழக அரசு ரூபாய் 18524 கோடி செலவு செய்துள்ளது.

இதில் தமிழக அரசின் சொந்த நிதி ரூபாய் 11,762 கோடி. வெளிநாட்டு நிதி நிறுவனம் மூலமாக ரூபாய் 6802 கோடி.ஆனால், மெட்ரோ ரெயில் திட்ட மொத்த மதிப்பீட்டு தொகையில் வெறும் 12 சதவிகிதத்தை மத்திய அரசு ஒதுக்கியிருக்கிறது. மீதி 88 சதவிகிதத்தை தமிழ்நாடு அரசும், ஜிகா நிதி நிறுவனத்தில் பெறுகிற கடன் மூலமாகத் தான் இத்திட்டம் நிறைவேற்றப்படுகிறது என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறோம்.கடந்த 2023-24 நிதிநிலை அறிக்கையில் மெட்ரோ ரெயில் திட்டங்களுக்கு மத்திய அரசு ஒதுக்கிய மொத்த தொகை ரூபாய் 19518 கோடி. 2024-25-ல் நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்ட தொகை ரூபாய் 21,335 கோடி. இதில் ஒரு பைசா கூட தமிழகத்திற்கு ஒதுக்காத மத்திய பா.ஜ.க. அரசு வெறும் ரூபாய் 7425 கோடி தான் ஒதுக்கியிருக்கிறது.பொதுவாக பா.ஜ.க. ஆளும் குஜராத், பீகார் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதியை ஒதுக்கி, பாரபட்சமாக நடந்து கொள்கிற போக்கைத் தான் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. இத்தகைய மோடி அரசின் மாநில விரோத போக்கு கூட்டாட்சி முறைக்கு கடும் கேடு விளைவிக்கக் கூடியதாகும். இத்தகைய போக்கை மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசு தொடர்ந்து மேற் கொள்ளுமேயானால் ஏற்கனவே தமிழக மக்களின் கடும் சீற்றத்திற்கு ஆளாகியுள்ள பா.ஜ.க.வை மக்கள் வெறுத்து ஒதுக்குகிற நிலை ஏற்படும் என எச்சரிக்கிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story