தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்த யாரோ திட்டமிட்டு செய்த சதி - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி
பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம் குறித்து அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
சென்னை,
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகை முன்பு இருசக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் பெட்ரோல் குண்டு வீசிய நபரை மடக்கிப் பிடித்தனர்.
அவர் தேனாம்பேட்டையைச் சேர்ந்த வினோத் என்பது தெரிய வந்தது. அவரிடம் மேற்கொண்ட முதல்கட்ட விசாரணையில், தான் சிறையில் இருந்த காலத்தில் வெளியே வர கவர்னர் ஒப்புதல் தராததால் பெட்ரோல் குண்டு வீசியதாக தெரிவித்தார். அவருக்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சென்னை காவல் ஆணையர் சந்திப் ராய் ரத்தோர் ஆளுநரை சந்தித்து விளக்கம் அளித்துள்ளார்.
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து புதுக்கோட்டையில் அமைச்சர் ரகுபதி அளித்த பேட்டியில்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க எடுக்கும் நடவடிக்கைகள் போல இதுவரை யாரும் எடுத்ததில்லை. ஆளுநர் மாளிகையின் முன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடந்துள்ளது. இதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு, குண்டு வீசிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் விசாரணை செய்யப்பட்டு வருகின்றார்.
அவருக்கு எந்த வித பின்புலமும் இருப்பதாக இதுவரை தெரியவில்லை. அவர் 8 மாதங்களாக சிறையில் இருந்துள்ளார். சிறையில் அவருக்கு மற்ற நபர்களுடன் தொடர்பு இருந்ததாக தெரியவில்லை. சிறையில் இதற்கான சதி திட்டம் தீட்டப்பட்டதாகவும் இதுவரை தெரியவில்லை. மேலும் அவர் இதற்கு முன்னரும் இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார். இது குறித்து போலீசார் முழு விசாரணை செய்து வருகின்றனர்.
மேலும் அவர் கூறியதாவது, ஆளுநர் மாளிகைக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது. சாலையில் போகிற யாரோ ஒருவர் எதையோ வீசிவிட்டுச் செல்கிறார் என்றால் அதற்கு உளவுத்துறையோ, யாரோ எப்படி பொறுப்பேற்க முடியும். அதேநேரத்தில், உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார். நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிரியையும் பாதுகாக்க வேண்டும் என்பவர் தான் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்.
ஆளுநர் மாளிகைக்கு பாதுகாப்பு இல்லை என்று போகிற போக்கில் சொல்லக் கூடாது. திமுகவிற்கு கெட்டப்பெயரை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக யாரோ செய்த சதிச்செயல்தான் இந்த சம்பவம். திமுக கூட்டணிக் கட்சியினர் ஆளுநர் மீது வாய்மொழித் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறுகிறார்கள்.அவர் தான் எதிர்க்கட்சித் தலைவரைப் போன்று ஊர் ஊராகச் சென்று பிரசாரம் செய்து வருகிறார். நாங்களும் பொறுத்து சென்றோம்.
ஆனால் தவறான தகவல்களுக்கு பதில் அளிக்க வேண்டியது எங்களின் கடமை. அதன்படி நாங்கள் அவருக்கு பதில் தான் கொடுத்து வருகிறோம். யாரையும் அசிங்கப்படுத்த வேண்டிய நோக்கம் எங்களுக்கு இல்லை என்றார் அமைச்சர் ரகுபதி.