எந்திரன் படத்தின் கதை மீது உரிமை கோரிய வழக்கு தள்ளுபடி -ஐகோர்ட்டு தீர்ப்பு
எந்திரன் படத்தின் கதை மீது உரிமை கோரி தொடரப்பட்ட மற்றொரு வழக்கையும் சென்னை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த், நடிகை ஐஸ்வர்யாராய் உள்ளிட்டோர் நடிப்பில், இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் 'எந்திரன்' திரைப்படம் கடந்த 2010-ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தின் கதை தங்களுடையது என்று பலர் இயக்குனர் ஷங்கருக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். அந்த வகையில், பத்திரிகையாளர் ஆருர் தமிழ்நாடன் தொடர்ந்த வழக்கு கடந்த மாதம் தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்தநிலையில், எந்திரன் திரைப்படத்தின் கதை மீது உரிமை கோரி கே.கே.சண்முகம் என்ற பாலகங்காதர் என்பவர் கடந்த 2011-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
ரோபோ அங்கிள்
இவர் தாக்கல் செய்த வழக்கில், ''ரோபோ அங்கிள் என்ற பெயரில் 1989-ம் ஆண்டு கதை எழுதினேன். இந்த கதையை பல தயாரிப்பாளர்களிடம் சொல்லியுள்ளேன். இந்த கதை விவாதத்தின் போது 2 முறை இயக்குனர் ஷங்கர் கலந்து கொண்டார்.
இதன்பின்னர், என்னுடைய கதையை திருடி எந்திரன் என்ற பெயரில் திரைப்படம் எடுத்துள்ளார். இதுகுறித்து அவருக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பியும் பதில் தெரிவிக்க வில்லை. எனவே, எனக்கு ரூ.2 கோடியே 25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
ஆங்கில திரைப்படம்
இந்த வழக்கிற்கு இயக்குனர் ஷங்கர் பதில் மனு தாக்கல் செய்தார். அதில், மனித உருவ ரோபோக்கள் கதை பல ஆண்டுகளுக்கு முன்பே ஆங்கில திரைப்படங்களில் வெளியாகி விட்டது. என்னுடைய கதைக்கும், மனுதாரரின் கதைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறியிருந்தார்.
இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, மனுதாரர் இறந்து விட்டார். அதனால், அவரது சட்டப்படியான வாரிசுகள் இந்த வழக்கை தொடர்ந்து நடத்தினர்.
இந்த வழக்கை நீதிபதி பி.டி.ஆஷா விசாரித்தார்.
சம்பந்தம் இல்லை
இயக்குனர் ஷங்கர் தரப்பில் வக்கீல் டி.சாய்குமரன் உள்ளிட்டோர் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பி.டி.ஆஷா பிறப்பித்த தீர்ப்பில், ''தன்னுடைய ரோபோ அங்கிள் கதையை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிவு செய்ததாக மனுதாரர் கூறியிருந்தார். குறுக்கு விசாரணையின்போது, கதையை பதிவு செய்யவில்லை. தலைப்பை மட்டும் பதிவு செய்ததாக கூறினார். அதேபோல, எந்திரன் படத்தின் காட்சிகள், மனுதாரர் கதையில் உள்ளதா? என்று ஷங்கர் தரப்பில் கேட்டபோது இல்லை என்று பதில் அளித்தார். எனவே, மனுதாரர் கதைக்கும், எந்திரன் கதைக்கும் முற்றிலும் சம்பந்தம் இல்லை என்பது தெரிகிறது. மேலும், எந்திரன் படத்தை பார்க்க வில்லை என்றும், அந்த படத்தை பார்த்த பிறர் சொன்னதால், அது தன்னுடைய கதை என்று கூறுவதாகவும் அவர் கூறியுள்ளார். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறேன்'' என்று கூறியுள்ளார்.