கோமுகி அணையில் படகு சவாரி தொடங்க வேண்டும்

கல்வராயன்மலையை சுற்றுலா தலமாக மேம்படுத்தும் வகையில் கோமுகி அணையில் படகு சவாரி தொடங்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கச்சிராயப்பாளையம்,
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிகவும் அடர்ந்த வனப்பகுதியாக கல்வராயன்மலை உள்ளது. இங்கு பெரியார், கவியம், மேகம், சிறுகலூர், எட்டியார், வஞ்சிக்குழி ஆறு என்று எண்ணற்ற நீர் வீழ்ச்சிகள் உள்ளன. அத்தனை நீர் வீழ்ச்சிகளில் இருந்து வரும் மழை நீரை சேமித்து பாசனத்துக்கு பயன்படுத்தும் வகையில் மலை அடிவாரத்தில் கோமுகி அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மொத்த பரப்பளவு 3.6 சதுர கிலோ மீட்டர் ஆகும். மேலும் மொத்த கொள்ளளவு 44 அடி ஆகும். அணையின் 3 புறங்களில் மலைகள் சூழ்ந்தும், ஒருபுறம் அணையின் கரையும் அமைந்துள்ளது. கண்ணை கவரும் வகையில் ரம்மியமாக காட்சி அளிக்கும் இந்த அணையை பார்க்க தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
ஆனால் மலையோடு சேர்த்து அணையின் முழு தோற்றத்தையும் பார்த்து ரசிக்கும் வகையில் படகு சவாரி தொடங்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இருப்பினும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
பாதை வசதி
அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விட்டாலும். குடிநீர் தேவைக்காக அணையில் குறிப்பிட்ட அளவுக்கு தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது. இதன் காரணமாக அணையில் ஆண்டு முழுவதும் தண்ணீர் இருக்கும். சுற்றுலா பயணிகளுக்காக கல்வராயன்மலையில் படகு குழாம் உள்ளது.
ஆனால் அந்த குழாம் மிகவும் சிறியதாக இருப்பதால், அதனை சுற்றுலா பயணிகள் பயன்படுத்த பெரிய அளவில் ஆர்வம் காட்டுவதில்லை. மேலும் கவியம், மேகம் உள்ளிட்ட நீர்வீழ்ச்சிகளுக்கு செல்ல பாதை வசதி இல்லை. இதனால் கல்வராயன்மலையை சுற்றிபார்க்க வரும் சுற்றுலாபயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்து வருகின்றனர்.
நடவடிக்கை
எனவே கல்வராயன்மலையை சுற்றுலா தலமாக மேம்படுத்தும் வகையில் கோமுகி அணையில் படகு சவாரி தொடங்கினால் கல்வராயன்மலைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இதன் மூலம் பின்தங்கி உள்ள கல்வராயன்மலை பகுதி வளர்ச்சி அடையும். இதனை கருத்தில் கொண்டு கோமுகி அணையில் படகு சவாரி தொடங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.






