கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த சென்னை மாநகராட்சி செயல்பாடுகளை நேரில் பார்த்த அமெரிக்க குழு


கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்த சென்னை மாநகராட்சி செயல்பாடுகளை நேரில் பார்த்த அமெரிக்க குழு
x

சென்னை மாநகராட்சியில் கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவது தொடர்பாக அதன் செயல்பாடுகளை அமெரிக்க குழு நேரில் வந்து பார்வையிட்டது.

சென்னை

அமெரிக்காவின் சான் ஆன்டோனியா மாநகருடன், பெருநகர சென்னை மாநகராட்சி இணைந்து இரு மாநகர மக்களின் ஆக்கப்பூர்வ உறவுகளை மேம்படுத்துவது, கல்வி, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பை மேம்படுத்துவது, இரு மாநகர மக்களின் பண்பு, அறிவுத்திறன், பொருளாதாரம் ஆகியவற்றை வளப்படுத்துவது என ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டுள்ளது.

சகோதரத்துவ நகரங்களின் இணைப்பு என்ற திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முறையாக செயல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல் கூட்டம் பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில் நேற்று நடந்தது.

மேயர் ஆர்.பிரியா தலைமையில் நடந்த இந்த கலந்துரையாடலில் சான் ஆன்டோனியா நகரின் மேயர் ரான் நிரன்பர்க் தலைமையிலான குழுவினர் கலந்து கொண்டனர்.

அப்போது பெருநகர சென்னை மாநகராட்சியின் கட்டமைப்பு, திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து மாநகராட்சி கமிஷனர் ககன்தீப்சிங் பேடி எடுத்துக்கூறினார்.

பெருநகர சென்னை மாநகராட்சியும், சான் ஆன்டோனியோ நகர நிர்வாகமும் ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள செயல்பாடுகளை நிறைவேற்றும் வகையில் ஒத்துழைப்பது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதன் பின்பு மாநகராட்சி கூட்ட அரங்கை அமெரிக்க குழுவினர் பார்வையிட்டனர். மன்ற கூட்டத்தின் செயல்பாடுகள் குறித்து மேயர் எடுத்துக்கூறினார்.

முன்னதாக மேயர் ஆர்.பிரியா, சான் ஆன்டோனியோ மேயர் ரான் நிரன்பர்க் மற்றும் அவரது குழுவினருக்கு சென்னை மாநகராட்சி சார்பாக நினைவுப்பரிசு வழங்கினார்.

இந்த கலந்துரையாடல் கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், சான் ஆன்டோனியோ நகர முன்னாள் மேயர் பில் ஹார்டுபெர்கர், அமெரிக்க துணை தூதர் ஜுடித் ரவின் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


Next Story