100 சதவீதம் மாணவர்கள் உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதே நோக்கம் - தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா


100 சதவீதம்  மாணவர்கள்  உயர்கல்வியில் சேர வேண்டும் என்பதே  நோக்கம் -  தலைமைச் செயலாளர்  சிவதாஸ் மீனா
x
தினத்தந்தி 8 May 2024 11:22 AM GMT (Updated: 8 May 2024 11:47 AM GMT)

இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை மாவட்டத்திற்கான `கல்லூரிக் கனவு' நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை,

12-ம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு இப்போது மாவட்ட வாரியாக நான் முதல்வன் திட்டத்தின் கீழ் `கல்லூரி கனவு 2024' நிகழ்ச்சி அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறுகிறது.சென்னையில் இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் சென்னை மாவட்டத்திற்கான `கல்லூரிக் கனவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சென்னையில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் தனியார் மேல்நிலைப் பள்ளிகளில் 12 -ம் வகுப்பு பயின்ற மாணவ-மாணவியர்கள் கலந்து கொண்டனர்.நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் சிவதாஸ் மீனா, முதல்-அமைச்சரின் தனி செயலாளர் முருகானந்தம் மற்றும் அதிகாரிகள் பங்கேற்று ஆலோசனை வழங்கினார்கள்.

பின்னர் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது,

தேசிய அளவில் ஒப்பிடும்போது தமிழகத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவ-மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. வரும் கல்வியாண்டில் ஜூலை முதல் தமிழ் புதல்வன் திட்டம் செயல்பாடு தொடங்கப்பட உள்ளது.உயர்கல்வியில் மாணவர்கள் கட்டாயம் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் தான் கல்லூரி கனவு திட்டம் செயல்படுத்தப்பட்டு உள்ளது. எத்தனை மாணவர்கள் உயர் கல்வியில் சேராமல் உள்ளனர் என்பதை கண்டறிந்து, அனைவரும் கல்லூரியில் சேர என்னென்ன வழிகள் உள்ளன என்பது குறித்து எடுத்துரைக்கப்படும்.

100 சதவீதம் உயர்கல்வியில் மாணவர்கள் சேர வேண்டும் என்பது தான் நோக்கம். 30 ஆயிரம் பேர் கடந்த ஆண்டு இந்த முயற்சியால் கூடுதலாக சேர்ந்துள்ளனர். புதுமை பெண் திட்டத்திற்கு பின் 20 சதவீதம் சேர்க்கை அதிகரித்துள்ளது" என்றார்


Next Story