அக்னிபத் திட்டம் ராணுவத்துக்கு செய்யும் துரோகம் - கே.எஸ். அழகிரி பேட்டி
அக்னிபத் திட்டம் ராணுவத்துக்கு செய்யும் துரோகம் என்று காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி பேட்டி அளித்துள்ளார்.
அக்னிபத் திட்டம் ராணுவத்துக்கு செய்யும் துரோகம்
கடலூர்,
அக்னிபத் திட்டத்திற்கு எதிராக தமிழகம் முழுவதும் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி, விருத்தாசலம் பாலக்கரையில் மத்திய அரசின் அக்னிபத் திட்டதிற்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சி மாநில தலைவர் கே.எஸ். அழகிரி கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசு கொண்டு வந்துள்ள அக்னிபத் திட்டம் என்பது நம்முடைய ராணுவத்திற்கு செய்யக்கூடிய ஒரு துரோகம். ராணுவத்திற்கு 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஆள் சேர்க்கும் ஒரு திட்டத்தை பாரதீய ஜனதா கொண்டு வந்துள்ளது.
4 ஆண்டுகளில் ராணுவத்தில் ஒரு இளைஞரால் எதையுமே அறிந்துகொள்ள முடியாது. 4 ஆண்டுகளுக்கு பிறகு ஆர்.எஸ்.எஸ். ஒரு ராணுவத்தை தயார் செய்ய விரும்புகிறது. அந்த ஆர்.எஸ்.எஸ். ராணுவத்தில் தான் தற்போது அறிவித்துள்ள திட்டத்தில் 4 ஆண்டுகள் முடித்தவர்கள் சேர்வார்கள். இதற்கான பயிற்சியை தான் மக்களின் வரிப்பணத்தில் இன்று மோடி அரசாங்கம் செய்து வருகிறது. இது தவறு.
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அடிக்கல் நாட்டி 7 ஆண்டுகாலம் ஆகிறது. ஆனால் இதுவரைக்கும் எந்த முன்னேற்றமும் இல்லை. ஆனால் நாடு வேகமாக மோடி ஆட்சியில் முன்னேறுகிறது என்று கூறுகிறார்கள்.
ரெயில்வே துறையில் தமிழகம் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்துள்ள வந்தே மாதரம் என்கிற திட்டத்தில் தமிழ்நாட்டில் ஒரு ரெயில் கூட இல்லை. ரெயில்வே திட்டங்கள் புறக்கணிக்கப்பட்டால் தமிழ்நாட்டினுடைய பொருளாதாரங்கள் புறக்கணிக்கப்படும். தொழிற்சாலைகள் வருவது நிறுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.