ஈரோட்டில் 1½ மாதங்களுக்கு பிறகு ஜவுளிச்சந்தை மீண்டும் தொடங்கியது- விற்பனை மும்முரம்


ஈரோட்டில் 1½ மாதங்களுக்கு பிறகு ஜவுளிச்சந்தை மீண்டும் தொடங்கியது- விற்பனை மும்முரம்
x

ஈரோட்டில் 1½ மாதங்களுக்கு பிறகு ஜவுளிச்சந்தை மீண்டும் தொடங்கியது. ஜவுளி விற்பனையும் மும்முரமாக நடந்தது.

ஈரோடு

ஈரோட்டில் 1½ மாதங்களுக்கு பிறகு ஜவுளிச்சந்தை மீண்டும் தொடங்கியது. ஜவுளி விற்பனையும் மும்முரமாக நடந்தது.

ஜவுளிச்சந்தை

ஈரோட்டில் அப்துல்கனி ஜவுளிச்சந்தை வாரந்தோறும் திங்கட்கிழமை இரவில் இருந்து செவ்வாய்கிழமை வரை நடக்கிறது. மேலும், தினசரி கடைகளும் செயல்பட்டு வருகின்றன. அங்கு ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.54 கோடி செலவில் புதிய வணிக வளாகம் கட்டப்பட்டது. அதன்பிறகு கோர்ட்டு உத்தரவின்படி வணிகவளாகத்துக்கு அருகில் உள்ள தற்காலிக கடைகள் அகற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜவுளி விற்பனை பாதிக்காமல் இருக்க மீண்டும் அதே இடத்தில் கடைகளை அமைத்துக்கொள்ள அனுமதி கேட்டு ஜவுளிச்சந்தை வியாபாரிகள் தரப்பில் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது.

வருகிற டிசம்பர் மாதம் 31-ந் தேதி வரை பழைய இடத்திலேயே கடைகளை அமைத்துக்கொள்ள காலஅவகாசம் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அகற்றப்பட்ட பழைய இடத்திலே மீண்டும் கடை அமைக்கும் பணி கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக நடந்து வந்தது. அதுவரை ஜவுளிச்சந்தை நடைபெறாமல் இருந்து வந்தது.

சில்லரை விற்பனை

இந்தநிலையில் பணிகள் நிறைவடைந்து கடைகள் அமைக்கப்பட்டன. இதனால் 1½ மாதங்களாக செயல்படாமல் இருந்து வந்த ஜவுளிச்சந்தை நேற்று மீண்டும் தொடங்கியது. ஜவுளிச்சந்தை தொடங்கிய தகவல் அறிந்து, வெளிமாநில வியாபாரிகளும் ஆர்வமாக வந்து ஜவுளியை வாங்கி சென்றனர். இதனால் வியாபாரம் மும்முரமாக நடந்தது. இதேபோல் சில்லரை விற்பனையும் விறுவிறுப்பாக நடந்தது.

இதுகுறித்து ஜவுளி வியாபாரிகள் கூறும்போது, "தசரா பண்டிகையை முன்னிட்டு கர்நாடக மாநில வியாபாரிகள் பலர் ஜவுளியை மொத்தமாக கொள்முதல் செய்ய வந்திருந்தனர். இதேபோல் தீபாவளி பண்டிகைக்காக மொத்த வியாபாரிகள் வந்து ஜவுளியை வாங்கி சென்றனர். எனவே இந்த வாரம் மொத்த விற்பனையும், சில்லரை விற்பனையும் சிறப்பாக நடந்தது", என்றனர்.


Next Story