சென்னை-கூடூர் இடையே அதிவேக ரெயில் சேவைக்கான சோதனை ஓட்டம் - 143 கி.மீ. வேகத்தில் சென்றது
சென்னை-கூடூர் இடையே அதிவேக ரெயில் சேவைக்கான சோதனை ஓட்டம் நடந்தது. இந்த ஓட்டத்தில் அதிகபட்சமாக 143 கி.மீ வேகத்தில் ரெயில் பயணம் செய்தது.
தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
ரெயில் சேவைகளின் வேகத்தை அதிகரிக்க தெற்கு ரெயில்வே தண்டவாளங்களை மேம்படுத்துதல் மற்றும் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னை-கூடூர் இடையே ரெயில் சேவையின் வேகம் அதிகரிக்கப்படுவதற்கான சோதனை ஓட்டம் நேற்று நடைபெற்றது.
தற்போது உள்ள 110 கி.மீ வேகத்தில் இருந்து 130 கி.மீ வேகமாக அதிகரிக்கும் நோக்கில் இந்த சோதனை ஓட்டம் நடைபெற்றது. இதில் தெற்கு ரெயில்வே பொது மேலாளர் பி.ஜி.மல்யா, சென்னை கோட்ட மேலாளர் கணேஷ் மற்றும் ரெயில்வே அதிகாரிகள் உடன் பயணம் செய்தனர். இந்த ஓட்டத்தில் அதிகபட்சமாக 143 கி.மீ வேகத்தில் ரெயில் பயணம் செய்தது. சென்னை -கூடூர் இடையே 134 கி.மீ. தூரத்தை 84 நிமிடங்களில் வெற்றிகரமாக கடந்தது. இதன் மூலம் அதிவேக பயணத்தின் போது ரெயில் தண்டவாளங்களின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்தான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த ரெயில் சேவையை வேகப்படுத்துவதன் மூலம் ஆந்திரா, டெல்லி மற்றும் மும்பை போன்ற நகரங்களுக்கு வேகமாக பயணிக்க முடியும். இதே போல் வருகிற 2024- 2025-ம் ஆண்டுக்குள் சென்னை-ரேனிகுண்டா, அரக்கோணம்-சோரனூர், சென்னை எழும்பூர்- திண்டுக்கல் இடையே விரைவில் அதிவேக ரெயில் சேவை அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.