வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா; கம்பம் நடுதலுடன் தொடங்கியது


வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் சித்திரை திருவிழா; கம்பம் நடுதலுடன் தொடங்கியது
x
தினத்தந்தி 19 April 2023 9:00 PM GMT (Updated: 19 April 2023 9:00 PM GMT)

தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் கம்பம் நடுதலுடன் சித்திரை திருவிழா தொடங்கியது.

தேனி

தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோவிலில் கம்பம் நடுதலுடன் சித்திரை திருவிழா தொடங்கியது.

சித்திரை திருவிழா

தேனி அருகே வீரபாண்டியில் பிரசித்திபெற்ற கவுமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். மேலும் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. அப்போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அக்னி சட்டி, காவடி, ஆயிரம் கண்பானை, மாவிளக்கு, கரகம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள். மேலும் இந்த திருவிழாவை காண தேனி மட்டுமின்றி திண்டுக்கல், மதுரை, விருதுநகர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் வருகை தருவார்கள்.

அந்த வகையில் இந்த ஆண்டிற்கான திருவிழா நேற்று கம்பம் நடுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, நேற்று காலை வென்னி மரத்தில் வெட்டப்பட்ட மூன்று கிளைகளை கொண்ட கம்பம், வீரபாண்டி முல்லைப்பெரியாற்றில் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. பின்னர் அந்த கம்பம் ஊர்வலமாக கோவிலுக்கு கொண்டு வரப்பட்டு, அங்குள்ள பீடத்தில் கம்பம் நடப்பட்டது. அப்போது அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலித்தார். இதில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

திருத்தேரோட்டம்

திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக அடுத்த மாதம் (மே) 9-ந்தேதி அம்மன் மலர் விமானத்தில் உலா வருதல், 10-ந்தேதி முத்து பல்லக்கில் அம்மன் புறப்பாடு, 11-ந்தேதி புஷ்ப பல்லக்கிலும் அம்மன் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது. சிகர நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் 12-ந்தேதி தொடங்கி, 15-ந்தேதி வரை நடைபெற உள்ளது. திருவிழாவின் நிறைவு நிகழ்ச்சியாக 16-ந்தேதி ஊர் பொங்கல் வைக்கப்படுகிறது. அத்துடன் திருவிழா நிறைவுபெறுகிறது.

திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் மாரிமுத்து, வீரபாண்டி பேரூராட்சி செயல் அலுவலர் ஆறுமுகநயினார், கோவில் மேலாளர் பாலசுப்பிரமணியன், கோவில் கணக்கர் பழனியப்பன் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story