கெரகோட அள்ளியில்அஷ்ட வராகி அம்மன் கோவில் வருஷாபிஷேக விழாதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
காரிமங்கலம் அடுத்த கெரகோட அள்ளி காரப்பா கவுண்டர் பள்ளி வளாகத்தில் ஸ்ரீ அஷ்ட வராகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் முடிவடைந்து 2-ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி கணபதி பூஜை, சிறப்பு ஹோமம் மற்றும் யாக பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து யாக சாலையில் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டு புனிதநீர் குடங்கள் மேளதாளத்துடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது.
பின்னர் ஸ்ரீ அஷ்ட வராகி அம்மனுக்கு பல்வேறு வகையான பழங்கள், பால், பன்னீர், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்கள் கொண்டு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடு நடைபெற்றது. இதனை தொடர்ந்து அம்மனுக்கு வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டு சிறப்பு அலங்கார சேவை உபகார பூஜைகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.