மகேந்திரகிரியில் இஸ்ரோ சார்பில் தொழில்நுட்ப கல்லூரி- மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்


மகேந்திரகிரியில் இஸ்ரோ சார்பில் தொழில்நுட்ப கல்லூரி- மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம்
x

விண்வெளி ஆய்வில் தமிழர்கள் பங்களிப்பு அதிகரித்து வரும் நிலையில் இஸ்ரோ மையம் சார்பில் மகேந்திரகிரியில் தொழில்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டும் என்று நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருநெல்வேலி

நெல்லை மாவட்ட பஞ்சாயத்து கூட்டம் பாளையங்கோட்டை கே.டி.சி.நகரில் நேற்று நடைபெற்றது. மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் தலைமை தாங்கினார். செயலர் இசக்கியப்பன் முன்னிலை வகித்தார். மாவட்ட கவுன்சிலர்கள் கலந்து கொண்டு, தங்களது பகுதி வளர்ச்சி திட்டங்கள் குறித்து கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்கள்.

கூட்டத்தில், நெல்லை மாவட்ட பஞ்சாயத்து மூலம் 15-வது நிதிக்குழு சார்பில் ரூ.2.56 கோடி, பொது நிதியில் ரூ.5 கோடி வளர்ச்சி பணிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதில் குடிநீர் பணிக்கு ரூ.76 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. மேலும் 32 பஞ்சாயத்துகளுக்கு தூய்மை பணியை மேற்கொள்ள பேட்டரி வாகனம் வழங்குவதற்கும் நிதி ஒதுக்கீடு செய்து முடிவெடுக்கப்பட்டது. கூட்டத்தில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வி.எஸ்.ஆர்.ஜெகதீஷ் பேசும்போது கூறியதாவது:-

தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினம் ராக்கெட் ஏவுதளம் அமையும் சூழ்நிலையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். விண்வெளி துறையில் தமிழர்களின் பங்களிப்பு மிக முக்கியமானதுடன், அதிகரித்தும் உள்ளது. நெல்லை மாவட்டம் காவல்கிணறு அருகே உள்ள மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் தயாரிக்கப்படும் என்ஜின்கள் ராக்கெட்டில் பொருத்தி பயன்படுத்தப்படுகிறது. எனவே மகேந்திரகிரி இஸ்ரோ மையம் சார்பில் நெல்லை பகுதி மாணவ-மாணவிகள் விண்வெளித்துறை தொடர்பாக மேலும் படித்து பங்களிப்பை கூடுதலாக அளிக்கும் வகையில் விண்வெளி ஆராய்ச்சி தொழில்நுட்ப கல்லூரி அமைக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து இதுதொடர்பாக தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டது.


Next Story